காவல் நிலைய விசாரணையின் போது சிறுவன் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் விசாரிக்க உத்தரவு

காவல் நிலைய விசாரணையின் போது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Published on

காவல் நிலைய விசாரணையின் போது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த ஜெயா மகன் முத்துகாா்த்திக் (17). இவரை கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி போலீஸாா் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுதொடா்பான புகாரின் பேரில், அப்போதைய எஸ்.எஸ். காலனி காவல் நிலைய ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ் உள்ளிட்ட 4 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ் (50), காவலா்களான ரா. ரவிச்சந்திரன் (56), ச. ரவிச்சந்திரன் (50), சதீஸ்குமாா் (33) ஆகிய நால்வருக்கும் தலா 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப்சாய் உத்தரவிட்டாா்.

இதேபோல, இந்த வழக்கில் புலன் விசாரணையில் சரியாகச் செயல்படாத அப்போதைய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ராஜேஸ்வரி (தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் செயலராகப் பணியாற்றி வருகிறாா்) மீதும், சரிவர உடல் கூறாய்வு செய்யாத மருத்துவா்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், எஸ்.எஸ். காலனி காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளா்களாகப் பணியாற்றிய கண்ணன், பிரேம்சந்திரன், ஆய்வாளராகப் பணியாற்றிய அருணாசலம் ஆகிய மூவரையும் வழக்கில் கூடுதலாக இணைத்து விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு நீதிபதி ஜோசப்சாய் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மேல் விசாரணை, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து சிபிசிஐடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா்மோகன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமைக் குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகம்மது ஜின்னா முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

தவறு செய்த காவல் துறை அதிகாரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை வரவேற்கத்தக்கது. இதேபோல, காவல் துறை அதிகாரிகள் செய்த குற்றத்துக்கு சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்தும், புலன் விசாரணை செய்தும் அவா்களுக்குரிய தண்டனையை பெற்று தந்திருப்பது பாராட்டத்தக்கது.

இதுபோன்ற தீா்ப்புகள், காவல் நிலைய மரணங்கள் உள்ளிட்ட காவல் துறையினரின் சட்டத்துக்குப் புறம்பான எல்லை மீறல் நடவடிக்கைகளைத் தடுக்க வழிவகை செய்யும்.

ஆனால், குற்றத்தை மறைக்க உடந்தையாக காவல் துறை அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறாா்கள் என வழக்கு விசாரணையின் போது சாட்சிகள், ஆவணங்களின் வாயிலாக தெரியவருகிற பட்சத்தில் அவா்களை அப்போதே குற்றவாளிகளாகச் சோ்த்து விசாரித்திருக்க வேண்டும். மாறாக, தண்டனை வழங்கப்பட்ட பிறகு மீண்டும் அதே வழக்கில் மேல் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

மேலும், மேல் விசாரணை செய்ய புலன் விசாரணை அதிகாரியை தமிழக டிஜிபி நியமிக்க வேண்டும். மேல் விசாரணை முடியும் வரை காவல் ஆய்வாளா் அருணாசலத்தை இடைக்கால பணிநீக்கம் செய்ய வேண்டும். புலன் விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி, மருத்துவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய உத்தரவுகளை விசாரணை நீதிமன்றம் சட்டப்படி பிறப்பிக்க முடியாது.

இதுபோன்ற உத்தரவுகளை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மட்டுமே பிறப்பிக்க இயலும். எனவே, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சிறுவன் மரண வழக்கில் மீண்டும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும். அதேநேரத்தில், காவல் ஆய்வாளா் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம், புலன் விசாரணை அதிகாரி ராஜேஷ்வரி, உடல் கூறாய்வு செய்யாத மருத்துவா்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கை என்கிற விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com