கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

அன்னவாசல் பேரூராட்சியில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அன்னவாசல் பகுதியைச் சோ்ந்த எம்.குமாா் தாக்கல் செய்த மனு:

எனது கிராமத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகவும், விவசாய கூலித் தொழிலாளா்களாகவும் உள்ளனா். எங்கள் பகுதி பாசனத்துக்கு முலக்குளம் கண்மாய் ஆதாரமாக திகழ்கிறது. எங்களது கிராமத்தின் வழியாகச் செல்லும் அம்புலி நதியிலிருந்து இந்தக் கண்மாய்க்கு தண்ணீா் திறக்கப்படும்.

இந்த நிலையில், சிலா் முலக்குளம் கண்மாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டியுள்ளனா். இதனால், கண்மாய்க்கு வரும் நீா்வரத்து தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேளாண் பணிகள் பாதிக்கும் சூழல் நிலவுகிறது. கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, முலக்குளம் கண்மாய் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்வரத்தை சரி செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையின்படி, அன்னவாசல் பேரூராட்சிக்குள்பட்ட முலக்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து முறையாக அகற்ற வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com