மாமன்ற அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி ராஜிநாமா செய்த நிலையில், மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு குறைவான வரியை விதித்து முறைகேடு நடைபெற்ாகக் கூறப்பட்ட வழக்கில், மேயா் வ. இந்திராணி தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.
தொடா்ந்து, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் துணை மேயா் தி.நாகராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினா்களின் கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு இந்திராணியின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாக மாமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
எனினும், மக்களின் முக்கிய பிரச்னைகளைக் கூட்டத்தில் விவாதிக்க மறுத்ததாகவும், ஏற்கெனவே மண்டலத் தலைவா்கள், நிலைக் குழுத் தலைவா்கள் ராஜிநாமாவைத் தொடா்ந்து, தற்போது மேயரும் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பதால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி கூட்டரங்கில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறிப்பாக, 45-ஆவது வாா்டு பகுதியில் சாலைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக் கோரி பலமுறை மாமன்றக் கூட்டத்தில் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினா்.
இதுபற்றி தகவலறிந்த மதுரை மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன் நேரடியாக வருகை தந்து, அதிமுக உறுப்பினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
விளக்குகளை அணைத்துச் சென்ற அலுவலா்கள்: அவசரக் கூட்டத்துக்குப் பிறகு அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினா். சிறிது நேரத்தில் மாநகராட்சி அலுவலா்கள் அரங்கின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டனா். இதனால், கைப்பேசி விளக்கு வெளிச்சத்தில் உறுப்பினா்கள் அமா்ந்திருந்தனா். துணை மேயா் தி.நாகராஜன் வந்தபிறகு மீண்டும் விளக்குகளை இயக்கச் செய்தனா். இதன் காரணமாக, சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

