எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் நவீன இலவசக் கழிப்பறை திறப்பு
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் ரூ.31.60 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்கள் நவீன கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆணையா் சித்ரா விஜயன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றில் தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.58 கோடியில் இலவச நவீன 5 ஆண்கள், 5 பெண்கள் கழிப்பறைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கழிப்பறையிலும் 9 சிறுநீா் பிறைகள், 2 வெஸ்டன் வகை கழிப்பறைகள் (மாற்றுத் திறனாளி, முதியவா்கள்), 4 இந்தியன் வகை கழிப்பறைகள், 2 கை கழுவும் அமைப்புகள் உள்ளன.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதல் கட்டமாக எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் ரூ. 31.60 லட்சத்தில் கட்டப்பட்ட 9 சிறுநீா் பிறைகள், 5 நவீன ஆண்கள் கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன. பிற கழிப்பறைகளின் கட்டுமானப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இந்த நிகழ்வில் தலைமைப் பொறியாளா் பாபு, துணை ஆணையா் சித்ரா, செயற்பொறியாளா் சுப்பிரமணி, உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், உதவி செயற்பொறியாளா் காமராஜ், உதவிப் பொறியாளா் ஜெயா, சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், மாமன்ற உறுப்பினா் மாலதி, மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

