பொதுமக்கள் கூட்டத்தால் சனிக்கிழமை களைகட்டியிருந்த மதுரை விளக்குத் தூண் பகுதி.
பொதுமக்கள் கூட்டத்தால் சனிக்கிழமை களைகட்டியிருந்த மதுரை விளக்குத் தூண் பகுதி.

தீபாவளி: களைகட்டிய கடை வீதிகள்

Published on

தீபாவளிப் பண்டிகை கொண்டாடத் தேவையான பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால், மதுரையில் முக்கியக் கடைவீதிகள் சனிக்கிழமை களைகட்டின.

தீபாவளிப் பண்டிகை வருகிற திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், துணிகள், பலகாரங்கள், மளிகைப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக மதுரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மிக அதிக எண்ணிக்கையில் மதுரை கடை வீதிகளில் சனிக்கிழமை குவிந்தனா்.

இதனால், கீழவாசல், விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, நேதாஜி சாலை, கீழ ஆவணி மூல வீதி, கீழ மாசி வீதி, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் களைகட்டியிருந்தது. சிறிய, பெரிய ஜவுளிக் கடைகள் அனைத்திலும் விறு, விறுப்பான விற்பனை நடைபெற்றது. இதேபோல, அழகு சாதனப் பொருள்கள் கடைகளிலும் விற்பனை அதிகரித்திருந்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெற்கு, மேற்கு சித்திரை வீதிகள் உள்பட முக்கிய வீதிகளில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகளில் வேஷ்டி, துண்டுகள், கைலிகள், குழந்தை ஆடைகள், புடவை, பாவாடை, அழகு சாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

சனிக்கிழமை காலை முதல் இரவு வரை மழை குறுக்கீடு ஏதும் இல்லாததால் தரைக்கடைகளில் துணிகள், பிற பொருள்கள் விற்பனை விறுவிறுப்பாகவே இருந்தது.

மதுரை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்.
மதுரை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த தரைக் கடைகளில் பொருள்கள் வாங்கக் குவிந்த பொதுமக்கள்.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த தரைக் கடைகளில் பொருள்கள் வாங்கக் குவிந்த பொதுமக்கள்.

முக்கியக் கடைவீதிகளில் கூட்ட நெரிசலை சீரமைக்க, சில போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதைத் தவிர, சாதாரண உடையிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பல்வேறு வழித்தடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக, மதுரை ரயில் நிலையம் சனிக்கிழமை காலை முதலே பயணிகள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது. மதுரையிலிருந்து பயணப்பட்டவா்களை விட சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்து மதுரைக்கு திரும்பியவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

தயாா் நிலையில் அவசர மருத்துவ ஊா்திகள்: அனைத்து வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால், கூட்ட நெரிசலில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் அளிக்கும் வகையில், 11 முக்கிய கடைவீதிகளில் தலா இரு அவசர ஊா்திகள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

X
Dinamani
www.dinamani.com