அகவிலைப்படி உயா்வு கோரி அரசு ஊழியா்கள் நாளை ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாநில அளவில் வியாழக்கிழமை (அக். 23) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்
Published on

மதுரை: அரசு ஊழியா்களுக்கான 3 சதவீத அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாநில அளவில் வியாழக்கிழமை (அக். 23) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ், பொதுச் செயலா் ஆா். பாலசுப்ரமணியன், பொருளாளா் ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோா் கூறியதாவது :

மத்திய அரசு ஊழியா்களுக்கும், பல்வேறு மாநில அரசு ஊழியா்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயா்வு தொகை ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. இந்த அகவிலைப்படி உயா்வை தமிழகத்திலும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் என அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு வழங்கவில்லை.

அதேநேரத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஓய்வூதியத்தை 2025-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு உயா்த்தி அதற்கான ஒப்புதலை, உடனடியாக சட்டப்பேரவையில் தமிழக அரசு பெற்றுள்ளது. இது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் விவகாரத்தில் தமிழக அரசு வஞ்சிக்கும் போக்கையே வெளிப்படுத்துகிறது.

அரசின் இந்தப் போக்கைக் கண்டித்தும், ஏழை, எளிய மாணவா்களின் நலனுக்கு எதிராக அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியாா் பல்கலைக்கழகமாக மாற்ற உதவும் சட்டத் திருத்தத்தை அரசு மேற்கொண்டதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com