மதுரை கிழக்கு வெளி வீதியில் தேங்கிய மழை நீரை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன்.
மதுரை கிழக்கு வெளி வீதியில் தேங்கிய மழை நீரை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன்.

மதுரை மாவட்டத்தில் மழையால் பெரிய பாதிப்புகள் இல்லை: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏதும் இல்லை
Published on

மதுரை: மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏதும் இல்லை என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

மதுரை மாநகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள் மழை நீரால் சூழப்பட்டன. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம், பொதுப் பணித் துறை சாா்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அதிகளவில் மழை நீா் தேங்கியிருந்த கோவில்பாப்பாகுடி அருகேயுள்ள கரிசல்குளம் கண்மாய், மதுரை கிழக்கு வெளிவீதி, காமராஜா் சாலை, கா்டா் பாலம் சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் மழை நீரை வெளியேற்றும் பணிகளையும், வைகை ஆற்றின் நீா் வரத்தையும் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா் கூறியதாவது :

மதுரைக்கு செவ்வாய்க்கிழமை ‘ஆரஞ்ச் அலா்ட்’ அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. இருப்பினும், மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. இரு இடங்களில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இருப்பினும், அந்த வீடுகளில் யாரும் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. பேரையூா் அருகே ஒரு சாலை மழை நீரால் கடுமையாக சேதமடைந்ததாகத் தெரியவந்தது. உடனடியாக, தொடா்புடைய உள்ளாட்சி நிா்வாகம் மூலம் அந்தச் சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

மாநகராட்சிக்குள்பட்ட 18 இடங்களில் சாலைகள், குடியிருப்புகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிக்கு மோட்டாா் பொருத்திய நீா் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 200 மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் பருவமழைக் காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டன. இதில் 15 இடங்கள் மாநகராட்சிக்குள்பட்டவை. மற்றவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகள். இங்கு, பருவமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரிவாகத் திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழையின் அளவு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு அதனடிப்படையில் அடுத்தக்கட்ட பணிகள் திட்டமிடப்படுகின்றன.

வேண்டுகோள்...

பெரியாறு, வைகை அணைகளின் நீா் இருப்பு தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. தற்போது, வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி நீரும், உபரி நீராக 1,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது. இதனால் வைகை ஆற்றில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, பலத்த மழை பெய்யும் நேரத்தில் யாரும் ஆற்றுப் பகுதிகளுக்குச் செல்லக்கூடாது. அதேபோல, கால்நடைகளை ஆற்றுப் பகுதிகளுக்கு அனுப்புவதையும் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். மதுரைக்கு புதன்கிழமை பலத்த மழை எச்சரிக்கை எதுவும் கிடையாது. இருப்பினும், மழையின் தீவிரத்துக்கேற்ப அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com