காவலா் வீர வணக்க நாள் விழிப்புணா்வு வாகனம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்
மதுரை: மறைந்த காவலா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், காவலா் வீர வணக்க விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தமிழக காவல் துறையில் பணியாற்றி மறைந்த காவலா்களின் தியாகத்தை போற்றும் வகையில் ‘காவலா் வீர வணக்க நாள்‘ தமிழக அரசால் ஆண்டுதோறும் அக். 21- ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மறைந்த காவலா் நினைவுத் தூணில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா் மறைந்த காவலா்களுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மறைந்த காவலா்களின் தியாகத்தை போற்றும் விதமாக காவலா் வீர வணக்க நாள் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த வாகனம் ஒரு வார காலம் மதுரை மாநகரைச் சுற்றி வரும்.
நிகழ்வில், காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

