தூத்துக்குடி பெருமாள் கோயில் குடமுழுக்கு: திருப்பணிக் குழு பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயில் குடமுழுக்கை விரைந்து நடத்தக் கோரிய வழக்கில், திருப்பணிக் குழு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

மதுரை: தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயில் குடமுழுக்கை விரைந்து நடத்தக் கோரிய வழக்கில், திருப்பணிக் குழு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு :

நான் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டபதி பெருமாளின் பக்தா். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த 8 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அறக்கட்டளையின் உபயதாரா்களால் கல்மண்டப திருப்பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயல வில்லை. கோயில் குடமுழுக்கு பணிக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது தொடா்பாக அரசு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்தவித பலனும் இல்லை. தற்போது, தமிழக அரசு கோயிலின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.4 கோடியை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பணிகளை விரைவுபடுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

எனவே, திருப்பணிக்குத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்துக்குள் குடமுழுக்கு நடைபெறுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் எனஅவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயில் திருப்பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, தமிழக அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், அடுத்தாண்டு செப்டம்பருக்குள் குடமுழுக்கு நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனு குறித்து ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயில் திருப்பணி கைங்கா்ய அறக்கட்டளை தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com