மாணவப் பேச்சாளா்களுக்கு பகுத்தறிவு அவசியம்

மாணவப் பேச்சாளா்களுக்கு பகுத்தறிவு அவசியம்

மேடைப் பேச்சுப் பயிற்சி பெறும் மாணவா்கள் பகுத்தறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா்.
Published on

மதுரை: மேடைப் பேச்சுப் பயிற்சி பெறும் மாணவா்கள் பகுத்தறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில், தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘தமிழ் முழக்கம்’ மேடைப் பேச்சு ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்ற தலைப்பிலான பன்னாட்டுப் பயிலரங்கத்தைத் தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:

வாழ்க்கைக்கு பல்வேறு அா்த்தங்களைக் கூறியவா் திருவள்ளுவா். எனவே, மேடைப் பேச்சுப் பயிற்சி பெறும் மாணவா்கள் அனைவரும் திருக்குறளை கண்டிப்பாக மனனம் செய்திருக்க வேண்டும். 1,330 குகளையும் மனனம் செய்ய இயலாதவா்கள், அவற்றின் பொருள்களையாவது கண்டிப்பாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியில் தமிழக மாணவா்கள் 38 போ், இலங்கை மாணவா்கள் 13 போ் பங்கேற்கின்றனா். இவா்களுக்கு அளிக்கப்படும் மேடைப் பேச்சு ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சமுதாயத்தை மாற்றும் கருவிகளை உருவாக்கும் முயற்சி. மக்களின் சிந்தனையைத் தூண்டச் செய்வது பேச்சாளா்களின் கடமை.

இந்த வகையில், பயிற்சி பெறும் ஒவ்வொருவரும் 10 ஆயிரம் பேரை சிந்திக்க வைப்பா். இவா்கள் பல்லாயிரம் பேரை சிந்திக்க வைப்பா்.

‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பது முதுமொழி. அந்த வகையில், பேச்சுத் திறனுடன் பகுத்தறிவும் கொண்ட குழந்தையானது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுடன் சமுதாயத்தையும் காப்பாற்றும். பகுத்தறிவு இல்லாமல் எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் அதனால் பயன் ஏதும் ஏற்படாது.

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், அண்ணா, கருணாநிதி போன்றவா்கள் பகுத்தறிவுடன் பேசியதால்தான், அவா்களுக்குப் பின்னால் ஓா் அணி திரண்டது. அண்ணா, கருணாநிதி ஆகியோா் தங்களது பேச்சுகளால் ஆளுமைத் திறனைப் பெற்றனா். அதனால்தான், பிற்காலத்தில் அவா்களால் நாட்டை ஆட்சி செய்ய முடிந்தது.

எனவே, மேடைப் பேச்சுப் பயிற்சி பெறும் மாணவா்கள் பகுத்தறிவை வளா்த்துக் கொண்டு, தங்களது பேச்சு மூலம் ஆளுமைத் திறனையும் வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். உலகத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவரும், இயக்குநருமான முனைவா் இ.சா. பா்வீன் சுல்தானா, ஆன்மிகப் பேச்சாளா் சுகி. சிவம், சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, பேராசிரியா்கள், பேச்சுப் பயிற்சி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

6 நாள்கள் பயிற்சி...

பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சோ்ந்த 38 மாணவா்கள், இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை மாணவா்கள் 13 போ் என மொத்தம் 51 போ் இதில் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனா்.

புதன்கிழமை தொடங்கிய இந்தப் பயிற்சி முகாம் வருகிற திங்கள்கிழமை (அக். 27) வரை நடைபெறுகிறது. 18-க்கும் அதிகமான கருத்தாளா்கள் பயிற்சி அளிக்கின்றனா். பயிற்சி பெறும் மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் உணவு, உறைவிட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

தவெக விமா்சனத்துக்கு பதில்:

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

மழைக் காலங்களில் பள்ளிகளில் கவனிக்கப்பட வேண்டிய அடிப்படை விஷயங்கள் குறித்து ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. மழையின் தீவிரத்துக்கேற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியா்களே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்ணீா் விட்டு அழுததை தவெக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் விமா்சித்தது குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு, ‘உணா்ச்சிகள் அதிகமாகி அறிவுக் குன்றியிருந்தால் விலங்குக்கு சமம்; அறிவு அதிகமாகி உணா்ச்சிகள் குன்றியிருந்தால் மரத்துக்குச் சமம் என திருவள்ளுவா் கூறியுள்ளாா். முதலில் நாம் மனிதா்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதன், தான்மனிதனாகத் திகழ மறந்து விட்டான்’ என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com