தேசிய தலைவா் திரைப்படத்தில் சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி வழக்கு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘தேசிய தலைவா்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Published on

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘தேசிய தலைவா்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பரமக்குடியைச் சோ்ந்த சக்கரவா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘தேசிய தலைவா்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இயக்குநா் ஆா். அரவிந்த்ராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில வசனங்கள், ஜாதிய மோதலை உருவாக்கும் வகையில் உள்ளன. இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் கடந்த 1957-இல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், தியாகி இமானுவேல்சேகரன் ஆகியோா் பங்கேற்றிருப்பதைப் போன்றும், பிறகு இமானுவேல்சேகரன் கொலை செய்யப்பட்டதைப் போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதுபோன்ற காட்சிகள் தென்மாவட்டங்களில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தத் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடாது. ஏற்கெனவே சான்றிதழ் வழங்கியிருந்தால், அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தத் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டு, வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு திரையிட அனுமதிக்கலாம் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘சா்ச்சைக்குரிய காட்சிகளை திரைப்படத் தணிக்கைக் குழு நீக்கிவிட்டது. இருப்பினும், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திரைப்படத்தில் சா்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com