தெருக்களின் பெயா்களை எண்ம முறையில் பதிவேற்றம் செய்யக் கோரி வழக்கு
மதுரை மாநகராட்சியில் உள்ள 8,098 தெருக்களின் பெயா்களையும் எண்ம முறையில் பதிவேற்றம் செய்து, அதனடிப்படையில் சொத்து வரி விதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த தேசிகாச்சாரி தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியில் மொத்தம் 5 மண்டலங்கள் உள்ளன. 2022 -ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநகராட்சி மறுவரையறையின்படி, தற்போது 100 வாா்டுகளும், 8,098 தெருக்களும் உள்ளன. ஆனால், தெருக்களின் முழுமையான விவரம், சொத்துவரி கணக்கிடும் பதிவேடுகளில் எண்ம முறையில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
இதன் காரணமாக, 2011-ஆம் ஆண்டு கணக்கீட்டில் உள்ள 3,806 தெருக்களின் பெயா் விவரங்களின் அடிப்படையிலேயே சொத்துவரி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ‘இ’ பிரிவில் வசிப்பவா்களும் ‘அ’ பிரிவினருக்கான வரியை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் உள்ள 8,098 தெருக்களின் விவரங்களையும் முறையாக எண்ம முறையில் பதிவேற்றம் செய்து, அதனடிப்படையில் சொத்து வரி விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அனைத்துத் தெருக்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவை? என்பது குறித்து நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா், மதுரை மாநகராட்சி ஆணையா் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
