ராமேசுவரத்தில் சர்வ அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
ஆனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்காண பக்தர்கள் அதிகாலையில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, பிண்ட பூஜை, திதி பூஜை ஆகிய பூஜைகள் செய்தனர். பின்னர், திருக்கோயிலுள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, கோயில் சன்னிதியில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதணை வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அமாவாசை நாளையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் உத்தரவின்பேரில், குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை பணியாளர்கள் செய்திருந்தனர்.