கடலாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில், சென்ற ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத்தொகையை வழங்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடலாடி ஒன்றியக்குழுக் கூட்டத்துக்கு தலைவர் வீ.மூக்கையா தலைமை வகித்தார். ஆணையர் செந்தூர்பாண்டி, கிராம ஊராட்சிகள் (ஆணையர்) செல்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
கவுன்சிலர் முத்துமாரி மலைக்கண்ணன்: ஆப்பனூர் பிர்காவில் சென்ற ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டுத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் இளஞ்செம்பூர் வழியாக இ.நெடுங்குளம் செல்லும் தார்ச்சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அதனை சீரமைக்க வேண்டும், பசுமை வீடுகளுக்கு சிமெண்ட் மற்றும் காசோலைகளை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்.
கவுன்சிலர் முக்கூரான்: கண்மாய் மற்றும் ஊரணிகளில் உள்ள கருவேல மரங்களை ஏலம் விடும் தொகையை அலுவலக நிதியில் சேர்க்க வேண்டும்.
கவுன்சிலர் அகஸ்டா ஸ்டெல்லா: ரோஸ்மா நகர் தார்ச்சாலையை சீர் செய்ய வேண்டும். கீழ் குடிருப்பில் உள்ள அங்கன்வாடி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்.
காதர் பாட்ஷா: ஏர்வாடி பகுதிகளில் காவிரி தண்ணீர் விநியோகம் இல்லாததால், குடம் ரூ.5க்கு குடிநீர் வாங்க வேண்டியுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிஸாபர் அடிமை: காவிரி குடிநீர் திட்ட அதிகாரிகள், போக்குவரத்து துறை,விவசாயத்துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் ஒன்றியக் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.