சுடச்சுட

  

   மீன்குஞ்சுகள் வளர்ப்புத் திட்டம்: மீன்கள் அறுவடையால் விவசாயிகள் மகிழ்ச்சி

  By DN  |   Published on : 01st October 2014 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போதுமான மழையின்றி பயிர் சாகுபடி செய்ய இயலாத நேரத்திலும் குறைந்த காலத்தில் நிறைந்த லாபம் தரும் மீன் குஞ்சுகளை வளர்த்து அறுவடை செய்திருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

     ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டத்தின் துணை இயக்குநர் கமாலுதீன் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கூறியது:

   ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கோடைமழையினால் நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ்  அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டைகளில் மழைநீர் நிரம்பியது. பருவ மழையும் உரிய நேரத்தில் இல்லாததால் மானாவாரி பயிர்கள் எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை. இருப்பினும் வறட்சியான காலத்திலும் விவசாயிகள் தங்களது நிலத்திலிருந்து குறுகிய காலத்தில் வருமானம் பெறும் வகையில் கோடை மழையினால் பண்ணைக் குட்டைகளில் சேகரிக்கப்பட்ட நீரினில் மீன்குஞ்சுகள் வளர்த்து விவசாயிகள் ஆதாயம் பெறலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வம் காட்டிய விவசாயிகளில் முதல் முறையாக கடலாடி வட்டாரத்தில் 13 பேரும், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 7 விவசாயிகளுமாக மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களது பண்ணைக்குட்டைகளில் கடந்த மே மாதம் தலா 800 மீன்குஞ்சுகள் விடப்பட்டன. மீன்குஞ்சு மற்றும் அக்குஞ்சுகளுக்கான உணவுகள் யாவும் பண்ணை உற்பத்தி திட்டம் மூலம் 20 பேருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.

  மழைக்குறைவின் காரணமாக கடலாடி பகுதியில் உள்ள பண்ணைக் குட்டைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் மீன்குஞ்சுகள் விடப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில் சுமார் 70 சதவிகித வளர்ச்சியினை மீன்குஞ்சுகள் பெற்றிருந்தன.

      கடலாடி வட்டாரம் சிறைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடம் மற்றும் ரமேஷ்பாபு ஆகியோரது பண்ணைக்குட்டைகளில் மீன் அறுவடை செய்யப்பட்டது. தற்போது பிடிக்கப்பட்ட மீன் குஞ்சுகள் ஒவ்வொன்றும் 125 கிராம் முதல் 150 கிராம் எடை உள்ளதாகவும் இருந்தன.

  இம்மீன்களை கிலோ ஒன்றுக்கு ரூ.150 வீதம் விற்பனை செய்து, பயிர் சாகுபடி செய்ய இயலாத நேரத்திலும் சுமார் ரூ.7500 முதல் ரூ.8000 வரை வருமானம் பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

  முதல் முறையாக பண்ணைக் குட்டைகளில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு மூலம் குறைந்த கால அளவில் மிகுந்த பலன் கிடைப்பதைக் கண்ட விவசாயிகள் இனி வருங்காலங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த விவசாயிகளுக்கு தொடர்ந்து ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வழிவகை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கமாலுதீன் தெரிவித்தார்.

       முன்னதாக  பண்ணைக்குட்டைகளில் மீன் அறுவடை செய்யப்படும் போது வேளாண்மை இணை இயக்குநர் நா.வீ.கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai