சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

    By DN  |   Published on : 02nd October 2014 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம், அக். 1:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை புதன்கிழமை (அக்.1) முதல் துவக்கி உள்ளனர்.

      இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலர் கே.எம்.தமீம் ராஜா கூறியது..

       ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபாசனக் கண்மாய்களில் உள்ள காட்டுக்கருவேல மரங்களை வருவாய்த் துறையினரின் அதிகார வரம்புக்கு மாறாக உள்ளாட்சித் துறையினரால் ஏலம் விடுவதற்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு உயர் நீதிமன்ற

    தடையுத்தரவு இருந்தும் அதை அமல்படுத்தாமல் காட்டுக் கருவேல மரங்கள் தொடர்ந்து வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது. இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது எனவும் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

             மேலும், வருவாய்த் துறை அலுவலர்களை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பணியமர்த்தாமல் கோட்டம் விட்டு கோட்டம் பணியிட மாற்றம் செய்வதால் அலுவலர்களும், பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ஆட்சியரிடம் வலியுறுத்தியும் அக் கோரிக்கை மீது ஆட்சியர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  வட்டாட்சியர் பணி நியமனங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமிக்காமல் இருந்து வருகிறார். இதே முறையில் ராமநாதபுரம் வட்டாட்சியர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே, முன்னுரிமை அடிப்படையில் வட்டாட்சியர் நியமிக்கப்படாததால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கப் போவதில்லை என சங்கத்தின் சார்பில் முடிவு செய்தோம்.

         இக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 30 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன்புறமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் வாயிற் கூட்டத்தை நடத்தினோம். தற்போது அடுத்த கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 521 சங்க உறுப்பினர்களும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை அக்.1 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறோம். மேலும் மழைக் கால இரவுப் பணியினை தொடர்வது எனவும் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் கே.எம்.தமீம்ராஜா தெரிவித்தார்.

    பேட்டியின்போது சங்கத்தின் துணைத் தலைவர்கள் எஸ்.பழனிக்குமார்,பி.நாகநாதன், செயற்குழு உறுப்பினர்கள் ந.பரமசிவன், காசிநாததுரை ஆகியோரும் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai