சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு நகரில் உள்ள முக்கிய கோயில்களின் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வரிசையாக எடுத்துவரப்பட்டு மகர்நோன்பு பொட்டலில் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  நவராத்திரித் திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரித் திருவிழா காப்புக்கட்டு உற்சவத்தன்று, கலைவிழாவை கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேசுவர சுவாமிகள் தொடங்கி வைத்து அருளாசி வழங்கினார்.

  தொடர்ந்து ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் தினசரி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன. தினசரி அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். வெள்ளிக்கிழமை விஜயதசமித் திருநாளை முன்னிட்டு அம்மன் தங்க, வெள்ளிச் சிம்ம வாகனத்தில் அலங்காரமாகி திருவீதியுலா வந்தார்.

  முன்னதாக அம்மனுக்கு ராமநாதபுரம் ராணி சேதுபதி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், மன்னர் குமரன் சேதுபதி, சமஸ்தானத்தின் திவான் வி.மகேந்திரன், செயல் அலுவலர் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

  இதனைத் தொடர்ந்து அம்மன் மேள,தாளங்களுடன் வன்னிகாசூரனை வதம் செய்ய புறப்பட்டார்.

  அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு முன்பாக ராமநாதபுரம் நகரில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களைச் சேர்ந்த பர்வதவர்த்தினி அம்மன், வீரமாகாளி அம்மன், வெட்டுடையார் காளியம்மன், உக்கிர காளியம்மன், கோதண்டராமர், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, கோட்டை வாசல் விநாயகர், ராஜமாரியம்மன், ஸ்ரீஐய்யப்பன் உள்ளிட்ட தெய்வங்கள் மகர்நோன்பு பொட்டலுக்கு வந்து வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் வன்னிகாசூரனை வதம் செய்தார்.

  விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் எஸ்.பி.மயில்வாகனன் தலைமையில் டி.எஸ்.பி.அண்ணாமலை ஆழ்வார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai