சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கைத்தறிக் கண்காட்சியை திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திறந்து வைத்து விற்பனையையும் துவக்கி வைத்தார்.

  ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள வளர்ச்சித்துறை திருமண மண்டபத்தில் கைத்தறிக் கண்காட்சி 6 ஆம் தேதி முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைத்தறித்துணிகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இருந்து துண்டு, போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஜமக்காளம் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன. மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் பரமக்குடியிலிருந்து காட்டன் சேலைகள் மற்றும் பட்டுச்சேலை ரகங்களும், நாகர்கோவில் வேட்டி, கடலூர் குறிஞ்சிப்பாடி கைலி ரகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை திறந்து வைத்து விற்பனையையும் துவக்கி வைத்தார்.

  இது குறித்து கைத்தறித்துறை உதவி இயக்குநர் ஆர்.பி.கௌதமன் கூறியது: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 89 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதன் மூலம் 12,220 நெசவாளர்கள் பலனடைந்து வருகின்றனர். இச்சங்கங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் சேலை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

  நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் ஜவுளி தேக்கத்தினை குறைத்திடும் பொருட்டும், நுகர்வோர்களிடம் கைத்தறித்துணிகளின் விற்பனையினை பெருக்கும் பொருட்டும் ஆண்டு தோறும் மத்திய,மாநில அரசுகளின் நிதிஉதவியுடன் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

  ராமநாதபுரம் நகரில் கடந்த 10.10.2011 முதல் 24.10.2011 முடிய நடைபெற்ற கண்காட்சியில் ரூ.34.93 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதே போல இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 20 ஆம் தேதி வரை கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

  இந்த ஆண்டுக்கான விற்பனைக் குறியீடாக ரூ.15 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் வாங்கும் அனைத்து ரகங்களுக்கும் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கவும் அரசால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கைத்தறித்துணிகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

  பேட்டியின் போது கைத்தறித்துறை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், கண்காட்சி பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் நெசவாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai