Enable Javscript for better performance
ராமநாதபுரம் மாவட்ட தப்பாட்டக் கலைஞர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படுமா?சி.வ.சு.ஜெகஜோதி- Dinamani

சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்ட தப்பாட்டக் கலைஞர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படுமா?சி.வ.சு.ஜெகஜோதி

  By ராமநாதபுரம்  |   Published on : 09th October 2014 12:43 AM  |   அ+அ அ-   |    |  

  ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் இம் மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தப்பாட்டக் கலைஞர்கள் உணவுக்குக் கூட வழியின்றி, வறுமையில் வாடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

  தப்பு என்பது ஒரு வகையான இசைக் கருவி. மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்ட வடிவிலான சட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோலை இழுத்துக் கட்டியும், ஒட்டியும் இக் கருவி வடிவமைக்கப்படுகிறது. இதனை இசைக்கும் கலைஞர்கள் இடது கையில் மூங்கிலால் செய்யப்பட்ட சிம்புக்குச்சி ஒன்றையும், வலது கையில் பூவரசங் கம்பால் செய்யப்பட்ட அடிக்குச்சி ஒன்றையும் வைத்துக் கொண்டு இசைப்பார்கள்.

  தப்பு என்ற இசைக் கருவியை இசைத்து ஆடப்படுவதால், இது தப்பாட்டம் என்ற பெயரைப் பெற்றது. இது ஒரு போர் இசைக்கருவியாகவும் இருந்ததால், இதனை போர்ப்பறை என்றும் சொல்லுவது உண்டு. தமிழர்களின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான இக் கலையானது ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்த அற்புதக் கலையாகவும் திகழ்கிறது.

  பாரம்பரியமும் பல்வேறு சிறப்புகளும் உடைய தப்பாட்டக் கலையினை இசைக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வேறு எந்த மாவட்டத்திலும் தப்பாட்டக் கலைக்குத் தடையில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் எமனேசுவரம், பாண்டியூர், சித்தார்கோட்டை, பார்த்திபனூர், தேர்போகி, உச்சிப்புளி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 ஊர்களில் 2000-க்கும் மேற்பட்டோர் தப்பாட்டக் கலைஞர்களாக உள்ளனர். கோயில் திருவிழாக்கள், இறப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தப்பாட்டக் கலையை வாசித்துவந்த இவர்கள், கடந்த இரு ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முடியவில்லை.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் எந்த இடத்திலும் வாசிக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டோம் என்கிறார்கள் தப்பாட்டக் கலைஞர்கள்.

  இதுகுறித்து சிறந்த தப்பாட்டக் கலைஞர் விருதுபெற்ற பாண்டியூர் நிலாச்செல்வன் கூறியது..

  இக் கலைக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள 2000 தப்பாட்டக் கலைஞர்களில் 600-க்கும் மேற்பட்டோர் பகுதி நேரம் இத் தொழிலைச் செய்து கொண்டு மற்ற நேரங்களில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்றனர். தடையின் காரணமாக ஒரு ரூபாய்க்கு விற்கும் அரிசியை கூட வாங்கிச் சாப்பிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். பலரும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். கடந்த இரு வருடங்களாக தடை நீடிக்கிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இக் கலைக்கு தடை விதிக்கப்படவில்லை. பல ஊர்களில் திருவிழாக்களில் பங்கேற்க வாங்கிய முன்பணத்தை திரும்பக் கொடுத்து விட்டேன்.

  மழை நீர் சேகரிப்பு, அனைவருக்கும் கட்டாய கல்வி, எய்ட்ஸ் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அரசு விழாக்களுக்குக்கூட தடை காரணமாக அதிகாரிகள் அழைப்பதில்லை. கிராமங்களில் கூட இறுதி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. எங்களால் கலை நிகழ்ச்சிகளை நடத்துவோருக்கு எவ்விதப் பிரச்னைகளும் வருவதில்லை. தப்பாட்டக் கலைஞர்கள் யாரும் போதைப் பொருள்களை கூடப் பயன்படுத்துவதில்லை. கலவரங்களைத் தூண்டுவது இல்லை. தப்பாட்டத்துடன் ஆடலும், பாடலும் நிகழ்ச்சிக்கும் போலீஸார் தடை விதித்துள்ளனர். எதற்காகத் தடை என்பது புரியாத புதிராகவே உள்ளது. எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது. வேறு மாவட்டங்களுக்கு வாசிக்கச் சென்றால் கூடுதல் செலவாவதுடன், அந்தந்த மாவட்டக் கலைஞர்கள் எங்களது பிழைப்பைக் கெடுத்து விடாதீர்கள் என எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பிற மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை வாசிக்க அனுமதிக்கப்படுகிறது.

  எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் தடையை நீக்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். சமூக ஆர்வலர்களும், இசை ஆர்வலர்களும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றார்.

  இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியது..

  தோல் கருவிகளான மேளம், உருமி, தப்பு மற்றும் நாகஸ்வரம் ஆகியனவற்றை வாசிக்கத் தடை இல்லை. வாடிப்பட்டி மேளமும், செண்ட மேளமும் வாசிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அப்படியே வாசித்தாலும், ஊர்வலத்தின் துவக்கத்திலும், முடிவிலும் மட்டுமே வாசிக்கலாம் என்றும் ஊர்வலத்தின்போது வாசிக்கக் கூடாது என்றும் தடை உள்ளது. முக்கியமாக, பைபர் பிளாஸ்டிக் தகடு பொருத்தப்பட்ட தப்பாட்டக் கருவிகளுக்கு மட்டும் அவற்றை இசைக்கும்போது பலருக்கும் இடையூறாக இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai