சுடச்சுட

    

    டிச. 6 ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 10 ஆயிரம் வழக்குகளை முடிக்க திட்டம்

    By ராமநாதபுரம்,  |   Published on : 12th October 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் மாபெரும் மக்கள் நீதிமன்றம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அந்த ஒரு நாளிலேயே 10 ஆயிரம் நிலுவை வழக்குகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் மாவட்ட முதன்மை நீதிபதி த.பொன்பிரகாஷ் சனிக்கிழமை தெரிவித்தார்.

    ராமநாதபுரத்தில் இது குறித்து அவர் மேலும் கூறியது: மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் வழக்காடிகளுக்கு இடையில் சமரச்தீர்வு காண்பதற்காக மாபெரும் மக்கள் நீதிமன்றத்தினை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புது தில்லியில் உள்ள தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியன இணைந்து தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்த இருக்கின்றன.

    பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை, ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் தாலுகாக்களில் உள்ள அனைத்து சட்டப் பணிகள் மையங்களிலும் அந்தந்த பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்படும்.

    வாடகை, வங்கிக்கடன், வசதி உரிமை வழக்குகள், கடன் வசூலித்தல் உள்ளிட்ட உரிமையியல் வழக்குகள் மற்றும் தீர்ப்பாய வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள்,

    நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு வழக்குகள், மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் (திருட்டு வழக்குகள் நீங்கலாக) தொடர்பான பிரச்னைகள், விற்பனை வரி, வருமான வரி தொடர்பான பிரச்னைகள், வனச்சட்ட வழக்குகள், குற்றவியல் மற்றும் உரிமையியல் மேல் முறையீடுகள் ஆகியன நிலுவையில் இருந்தால் அவற்றை இரு தரப்பினரையும் வரச்சொல்லி சமரசம் பேசி தீர்த்து வைக்கப்படும். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தி முடிவு செய்யாமல் வழக்கை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவை தவிர சட்டத்தினால் தீர்க்கப்படக் கூடிய எந்த ஒரு பிரச்னையும், நீதிமன்றத்திற்கு செல்லக் கூடிய தன்மை இருந்தால் அந்த வழக்குகள் மற்றும் நீதிமன்றத்திற்கு போகாமலேயே முடிக்கக் கூடிய சட்டப் பிரச்னைகளான வங்கி வழக்குகள், நகராட்சி வழக்குகள் ஆகியனவும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு நிரந்தரத் தீர்வு காணப்படும்.

    மக்கள் நீதிமன்றத்தில் ராமநாதபுரம் நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் மக்கள் நீதிமன்ற நீதிபதிகளாக இருப்பார்கள். இதில் சமூக ஆர்வலர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். அன்று முடிவு காணப்படும் வழக்குகளின் தீர்ப்புகளின் விபரங்கள் வழக்காடிகளுக்கு அன்றே வழங்கப்படும்.

    மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளுக்கான முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மேல்முறையீடு செய்ய இயலாது.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமானால் அந்தந்த வழக்குகள் நடந்து வரும் நீதிமன்றங்களில் நேரிலோ அல்லது அஞ்சல் அட்டை மூலமாகவோ சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்களிடமும் தெரிவிக்கலாம்.

    இந்த உன்னத வாய்ப்பை வழக்குரைஞர்கள்,பொதுமக்கள், வழக்காடிகள் ஆகியோர் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட முதன்மை நீதிபதி த.பொன்பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார். பேட்டியின் போது சார்பு நீதிமன்ற நீதிபதி எம்.சந்திரன், தலைமை குற்றவியல் நீதிபதி டி.ஜெயராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai