சுடச்சுட

  

  அக்.17, 18-இல் ராமநாதபுரத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக கண்காட்சி

  By ராமநாதபுரம்  |   Published on : 13th October 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்சிக் கழக கண்காட்சி நடைபெறவுள்ளது. இதை மாணவ,மாணவியர் மற்றும் பொதுமக்களும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அக்கல்லூரியின் செயலர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

  இது குறித்து அவர் மேலும் கூறியது: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், விண்வெளி வாரத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் தமிழகம் முழுவதும் பயின்று வரும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு பயனடையும் வகையில் விண்வெளி அறிவியல் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. வருகிற 17, 18 தேதிகளில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் இண்டியன் ஸ்பேஸ் எக்ஸ்போ-2014 என்ற பெயரில் இந்த விண்வெளி அறிவியல் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் செய்துள்ள பல்வேறு சாதனைகள் பற்றிய விவரங்கள், மாதிரி ஏவுகணைகள், வரும் காலங்களில் இந்திய தேசம் விண்வெளித்துறையில் நிகழ்த்த இருக்கிற சாதனைகள், உலக அரங்கில் இந்திய விண்வெளித்துறையில் பங்கு போன்ற காண்பதற்கு அரிதான சுமார் 75க்கும் மேற்பட்ட வண்ண சுவரொட்டிகளையும்,மாதிரி ஏவுகணைகளும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

  வரும் 17 ஆம் தேதி, இதன் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் பங்கேற்கவுள்ளார்.

  மாணவ,மாணவியர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் விஞ்ஞானிகள் பலரும் பங்கேற்கின்றனர். கண்காட்சியை மாணவ,மாணவியர்கள் கண்டு களிக்க கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

  இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இரு நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சியை பார்வையிடலாம் என்று டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா தெரிவித்தார். பேட்டியின் போது கல்லூரி முதல்வர் பி.மாரிமுத்து மற்றும் பேராசிரியர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai