சுடச்சுட

    

    ரூ.14 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கைது

    By ராமநாதபுரம்,  |   Published on : 13th October 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நகை வியாபாரியிடம் ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.10லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

    மதுரையை சேர்ந்த நகை வியாபாரி சரவணன். இவர் கடந்த ஆகஸ்ட் 9இல் மதுரையிலிருந்து ராமேசுவரம் சென்ற அரசுப்பேருந்தில் ரூ. 14 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் பயணித்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கமுதக்குடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சரவணனுடன் அதே பேருந்தில் பயணித்த சிலர், வேகத்தடைக்கு முன்பு, சரவணனைத் தாக்கி, அவரிடமிருந்த 1,114 கிராம் தங்க நகைகளை பறித்தனர். வேகத்தடையில் வாகனம் மெதுவாகச் சென்றதைப் பயன்படுத்தி, பேருந்தில் இருந்து இறங்கி, பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி நகர் போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவின் பேரில் பரமக்குடி டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    இந்நிலையில், செப்டம்பர் 26 ஆம் தேதி பரமக்குடி மணிநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயன் மகன் முனியசாமி(33)யை விசாரித்தனர். சரவணனிடம் நகை கொள்ளையடித்ததில், முனியசாமி உள்ளிட்ட சிலர் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து முனியசாமியை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதில், முக்கிய குற்றவாளியான மதுரை கீரைத்துரையை சேர்ந்த சந்திரன் மகன் சதீஷ்(34), ஆட்டோ ஓட்டுநர், மதுரை சோலை அழகுபுரம் 1ஆவது தெருவைச் சேர்ந்த முத்து மகன் கணேசன்(40) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடமிருந்து, ரூ.10லட்சம் மதிப்புள்ள 875 கிராம் தங்கக் கட்டிகள், 6 கத்திகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரு தோட்டாக்கள் ஆகியனவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மதுரை ஜீவா நகர் பாலசுப்பிரமணியன் மகன் பூமிநாதன்(30), சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்த அயோத்தி மகன் தியாகராஜன்(33), மதுரை எம்.கே.புரம் போஸ் மகன் கார்த்திக் குமார்(28), மதுரை கீரைத்துரை நடுத்தெரு சுப்பிரமணி மகன் காளிகுமார்(40) ஆகிய 4 பேரும் ஈரோடு 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த செப். 24 ஆம் தேதி சரணடைந்துள்ளனர்.

    மற்றொரு நபரான மதுரை வில்லாபுரம் கிழக்குத்தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் ராமகிருஷ்ணன்(26) கடந்த செப். 26 ஆம் தேதி திருப்பூர் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.இந்தக் கொள்ளையில் முனியசாமி உள்பட 8 பேர் ஈடுபட்டிருந்ததாகவும், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4 பேர் ஈரோடு நீதிமன்றத்திலும், ஒருவர் திருப்பூர் நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

    இது குறித்து பரமக்குடி டி.எஸ்.பி.வினோத் சாந்தாராம் மேலும் கூறியது: இச்சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் மதுரை கீரைத்துரையை சேர்ந்த சதீஷ். இவரிடம் 40க்கும் மேற்பட்டோர் வேலை செய்துள்ளனர். அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    நகை வியாபாரிகள் வாரம் தோறும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் நகைகளை எடுத்துக் கொண்டு வேறு ஊர்களுக்கு சென்று விற்பனை செய்து விட்டு மீண்டும் எந்த நாளில் திரும்புகிறார்கள் என்பதை தொடர்ந்து இரு மாதங்களாக கண்காணித்து வந்துள்ளனர்.

    இச்சம்பவம் இரு மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு கூட்டாக சேர்ந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai