சுடச்சுட

  

  மீனவரின் மகனுக்கு கல்விக் கடன் வழங்க மறுப்பதாக புகார்

  By ராமநாதபுரம்,  |   Published on : 14th October 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கை ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் மகனுக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்க மறுப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மீனவரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

  ராமேசுவரம் ராமதீர்த்தம் வடக்குத் தெரு முருங்கைவாடி பகுதியில் வசித்து வருபவர் முத்துலெட்சுமி. இவரது கணவர் ராமு கடந்த 9.8.2004 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை ராணுவத்தினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். தற்சமயம் முத்துலெட்சுமி ராமேசுவரத்தில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் இருளேசுவரன் (19) மதுரையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆட்டோமொபைல் படிப்பு படித்து வருகிறார். இவருக்கு பொறியியல் படிப்பு படிக்க வங்கிகள் கல்விக் கடன் வழங்க மறுப்பதாக தாய் முத்துலெட்சுமி ராமநாதபுரம் ஆட்சியர் க. நந்தகுமாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பது:

  எனது கணவர் உயிரிழந்த பிறகு நானும் எனது குழந்தைகளும் மிகுந்த கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம். மகன் இருளேசுவரன் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்றதால் மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் படிப்பை தொடர பணம் இல்லை.

  பல வங்கிகளில் கடன் கேட்டு முயற்சித்தும் கல்விக் கடன் கிடைக்கவில்லை. எனவே எனது மகன் பொறியியல் படிப்பு படிக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai