சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரிக்கை

    By ராமநாதபுரம்  |   Published on : 14th October 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுக்க தப்பாட்டக் கலைஞர்கள் வந்தனர்.

    தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளில் ஒன்று தப்பாட்டக் கலை. தப்பு என்ற கருவி மூலம் இசைத்து நடனம் ஆடுவதால் இக்கலைக்கு தப்பாட்டக் கலை என்று பெயராயிற்று. ராமநாதபுரம் மாவட்டத்தில் தப்பாட்டக் கலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த தப்பாட்டக் கலைஞர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனர்.

    இது குறித்து தப்பாட்டக் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நிலாச் செல்வன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தப்பாட்டக் கலைஞர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தப்பாட்டக் கலைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இம்மாவட்டக் கலைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்கி இருக்கிறோம்.

    இந்தக் கலையை பகுதி நேரமாக செய்து கொண்டு 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர். இக்கலைக்கு தடை விதிக்கப்பட்டு விட்டதால் அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வேறு எந்த தொழிலும் தெரியாதவர்களாக இருப்பதால் இக்கலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.

    ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் தப்பாட்டக் கலை உள்பட பல்வேறு கலைகள் நன்கு வளர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று தப்பாட்டக் கலைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. தடை நீக்கக் கோரும் மனுவை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடுப்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து கலைஞர்களும் ஒன்று திரண்டு வந்தோம். ஆனால் காலதாமதமாக வந்ததால் மனுவை தபாலில் போட்டு விட்டு போகும் படி சொல்லி விட்டனர் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai