சுடச்சுட

    

    வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ற புகைப்படங்களை அஞ்சல் தலையாக மாற்றி கொடுக்கும் திட்டம் ராமநாதபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எம்.ஜெ. உதயசிங் திங்கள்கிழமை தெரிவித்தார்.

    அஞ்சலக வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தபால் தலைகள் கண்காட்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எம்.ஜெ. உதயசிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

    வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய எனது அஞ்சல் தலை என்ற புதிய திட்டம் அஞ்சல் துறையால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அஞ்சல் தலைகள் வெளியிடப்படும். வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் அழகிய சிறப்பு தபால் தலைகள் மற்றும் நிறுவனங்களின் சின்னம் (முத்திரை) உள்ளடக்கிய தபால் தலைகள் இதன் தனி சிறப்பாகும். இத்திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடது புறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை இந்தியா முழுவதற்கும் 20 கிராம் எடை வரையிலான தபால்களை அனுப்ப பயன்படுத்தலாம்.

    எனது தபால் தலை என்பது இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு நினைவுத் தபால் தலை வரிசையில் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது. வாடிக்கையாளர்கள் தரும் புகைப்படத்தின் தரத்தின் அடிப்படையிலேயே தபால் தலைகள் அச்சிடப்படுவதால் அதன் முழுப் பொறுப்பும் அவர்களையே சார்ந்ததாகும். இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து விண்ணப்பங்களைத் தந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தபால் தலைகளுள் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தபால் தலைகளை ஒரே விண்ணப்பத்தில் தேர்வு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் 12 தபால் தலைகள் அடங்கிய ஒரு சீட்டுக்கு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல் இணைக்கப்பட வேண்டும். புராதன கட்டடங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் தங்களின் வீடுகள், செல்லப் பிராணிகளின் புகைப்படத்துடனும் அஞ்சல் தலை வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலக அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

    முன்னதாக தபால் தலைகள் கண்காட்சியை எப்.2.எஸ். தன்னார்வ ரத்த தானத்துக்கான இணையதளத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேணு. சதீஷ்குமார் திறந்து வைத்தார். கண்காட்சி துவக்க விழாவுக்கு மகேஷ்குமார், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஆனந்தன், தபால் தலை சேகரிப்பாளர்கள் ஜெபராஜ் மைக்கேல், ஜோசப் அருள்ராஜ் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கண்காட்சியினை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் பார்வையிட்டனர். கண்காட்சியில் செவ்வாய், சதுரம் தவிர பிற வடிவங்களிலும், தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் எரிகற்களால் செய்யப்பட்ட 102 நாடுகளைச் சேர்ந்த தபால் தலைகள் இடம் பெற்றிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai