சுடச்சுட

    

    எஸ்.ஐ.க்கு கத்திக்குத்து: தற்காப்புக்காக சுட்டதில் இளைஞர் சாவு

    By DN  |   Published on : 15th October 2014 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டணம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியவரை, தற்காப்புக்காக  துப்பாக்கியால் சுட்டதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவுக்கு உள்பட்ட எஸ்.பி.பட்டணம் அம்ஜத் நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (23). இவர் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் மெக்கானிக்காக உள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த சாலிபு என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை பழுதுநீக்குவதற்காக விட்டிருந்தார்.

    வாகனம் பழுது நீக்கப்பட்ட பிறகு எஸ்.பி.பட்டணம் காட்டுபாவா ராவுத்தர் மகன் செய்யது முகம்மது (24) என்பவர், சாலிபுவின் வாகனத்தை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் மெக்கானிக் அருள்ராஜுக்கும், செய்யது முகம்மதுவுக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறின்போது செய்யது முகம்மது, அருள்ராஜை கத்தியால் குத்த முயன்றதால், அங்கிருந்து அருள்ராஜ் தப்பித்து, எஸ்.பி.பட்டணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில், போலீஸார் செய்யது முகம்மதுவை விசாரணைக்காக எஸ்.பி.பட்டணம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது செய்யது முகம்மது வைத்திருந்த கத்தி சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸின் மேஜை மீது இருந்துள்ளது.

    குடிபோதையில் இருந்த செய்யது முகம்மது திடீரென கத்தியை எடுத்து, விசாரணை செய்து கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸின் வயிற்றில் குத்தினாராம். மேலும், குத்த முற்படும்போது அவரது வலது கையிலும் காயம் ஏற்பட்டது. இதனால் தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், செய்யது முகம்மதுவை துப்பாக்கியால் 3 முறை சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் செய்யது முகம்மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கத்திக்குத்தில் காயமடைந்த  சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் உடனடியாக ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சை பெற்றார். உயிரிழந்த செய்யது முகம்மதுவின் உடல் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக எஸ்.பி.பட்டணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    எஸ்.பி.பட்டணத்தில் சாலைமறியல்: இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கிழக்கு கடற்கரைச் சாலையில், எஸ்.பி.பட்டணம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு பிரிவைச் சார்ந்த ஏராளமானோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், ஏடி.எஸ்.பி. வெள்ளத்துரை, திருவாடானை டி.எஸ்.பி. சேகர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai