சுடச்சுட

    

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் சாவு: உறவினர்கள் புகார்

    By DN  |   Published on : 15th October 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண் ஒருவருக்கு ரத்தம் ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்துவிட்டதாக அப் பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

      ராமநாதபுரம் அருகே வன்னிக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் மனைவி தாமரைச்செல்வி (22). (படம்) இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது.

     தற்போது கணவர் முருகவேல் வெளிநாட்டில் பணிசெய்து வருகிறார். தாமரைச்செல்வி கருவுற்றிருந்த நிலையில், பிரசவத்துக்காக இம் மாதம் 12 ஆம் தேதி ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

        அவருக்கு 12 ஆம் தேதி மாலை பெண் குழந்தை பிறந்தது. பெண்ணுக்கு ரத்தச்சோகை காரணமாக, மருத்துவர்கள் அவருக்கு ரத்தம் செலுத்தினராம்.

      ரத்தம் செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் ஒவ்வாமை காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டு, தாமரைச்செல்வி உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

     இதுகுறித்து தாமரைச்செல்வியின் தாயார் வீரம்மாள் அளித்த புகாரில், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக தாமரைச்செல்வி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

        இந்த நிலையில், தகுந்த நியாயம் கிடைக்கும் வரை, பிரேதப் பரிசோதனை செய்த சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் பலரும், அரசு மருத்துவமனை முன்பாக கூடியிருந்தனர். மேலும், ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தாமரைச்செல்வியின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்யாமல், வேறு இடத்திலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.

      சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் குழந்தையைப் பெற்ற பின் தாய் இறந்து விட்டதால், அக் குழந்தையின் நலன் கருதி இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்தனர்.

     இந்த நிலையில் தாமரைச்செல்வியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறை அதிகாரிகள், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

     சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai