சுடச்சுட

  

  அஞ்சலி செலுத்துவோர் சொந்த வாகனங்களில் மட்டுமே வர ஆட்சியர் வேண்டுகோள்

  By ராமநாதபுரம்,  |   Published on : 20th October 2014 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவிற்கு அஞ்சலி செலுத்த வருவோர் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் தேவர் ஜயந்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.விஸ்வநாதன், எஸ்.பி. மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் மேலும் பேசியது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 144 தடை உத்தரவின் அடிப்படையில் வாடகை வாகனங்கள், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை வர அனுமதி கிடையாது.

  இம்மாதம் 30 ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் விழாவிற்கு ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள். கார்,வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் உள்ளிட்ட அந்த சொந்த வாகனங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வாகன பதிவு சான்றிதழ், வாகன ஓட்டுநரின் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோரின் விவரம் உள்ளிட்டவற்றை 22 ஆம் தேதிக்குள் தெரிவித்து அனுமதி சான்று பெற வேண்டும். அதை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.

  அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வர வேண்டும். இதனை சோதனைச் சாவடியில் உள்ள காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப்பணியில் உள்ள காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். சரக்கு வாகனங்களில் வர முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யவோ, ஆயுதங்கள் எடுத்து வருவதோ, ஒலிபெருக்கிகள் பொருத்தி வருவதோ,சாதி,மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வருவதோ கூடாது. கோஷங்களை எழுப்புவதற்கும் அனுமதி கிடையாது. நடைபயணமாக வருவதற்கு அனுமதி கிடையாது. பசும்பொன்னில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் போதிய அளவு அரசுப்பேருந்துகள் இயக்கப்படும். அரசுப் பேருந்துகளில் மேற்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. முறையாக பயணச்சீட்டு பெற்று வர வேண்டும். பேருந்துகளில் ஜோதி எடுப்பது தொடர்பான பொருள்கள், ஆயுதங்கள், பேனர்கள், கொடி மற்றும் இசைக்கருவிகள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. பசும்பொன் கிராமத்தில் மட்டும் பிளக்ஸ் போர்டுக்கு அனுமதிவழங்கப்படும். பிளக்ஸ் போர்டில் இடம் பெறும் வாசகங்கள் குறித்து கமுதி காவல் நிலையத்தில் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

  விழாவிற்கு வருவோர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் எழுத்துப் பூர்வமான கோரிக்கையின் அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இம்மாதம் 22 ஆம் தேதிக்கு முன்னதாக அளிக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களும் சொந்த வாகனங்களில் மட்டுமேவர அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

  கூட்டத்தில் பரமக்குடி சார் ஆட்சியர் சமீரன் மற்றும் சமுதாயத் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai