சுடச்சுட

    

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது: ஆட்சியர்

    By ராமநாதபுரம்,  |   Published on : 20th October 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளிப்பண்டிகை தீப ஒளித் திருநாளாகும். இந்நாளில் அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் தாற்காலிக செவிட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 125 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் எழுப்பும் பட்டாசினை தவிர்த்து விபத்தில்லா தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    உச்ச நீதிமன்ற ஆணைப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள்ளாக எந்தவித சப்தமும் ஏற்படுத்தும் கொட்டு மேளங்களையோ அல்லது வேறு ஒலிபெருக்கி விளம்பரங்களையோ (அவசர காலங்கள் தவிர)பயன்படுத்தக் கூடாது. போக்குவரத்து நெரிசலான சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. திறந்த வெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம். குறுகிய சந்துகள்,அடுக்குமாடி குடியிருப்புகள் மத்தியில் பட்டாசு வெடிக்கக்கூடாது. மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான சாலைகளில் வெடிக்க கூடாது.

    பட்டாசுகளை வீட்டில் மூட்டையாக கட்டிப்போடக் கூடாது. அவற்றைக் பற்றவைக்க தீக்குச்சிகளை பயன்படுத்தாமல் நீண்ட ஊதுபத்திகளை உபயோகிக்க வேண்டும். இறுக்கமான, கடினமான பருத்தி ஆடைகளை உடுத்தி பட்டாசு வெடிக்க வேண்டும். ராக்கெட் வெடிகளை தவிர்த்தால் குடிசை பகுதிகளில் தீ விபத்து தவிர்க்கப்படும். தீக்காயங்கள் ஏற்படும் போது அதிகமான தண்ணீரை காயத்தின் மேல் ஊற்ற வேண்டும்.

    கண்ணில் ஏற்படும் தீக்காயங்களை அதிக தண்ணீர் விட்டு 10 நிமிடங்களுக்கு குறையாமல் கண்ணை கழுவ வேண்டும். பின்பு மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். குழந்தைகளின் சட்டைப் பைகளில் வெடிகளை வைக்க அனுமதிக்காதீர்கள். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

    பட்டாசுகளுக்கு அதிகம் செலவிடும் பணத்தை ஏழைகளுக்கு பாடப்புத்தகங்கள், ஆடைகள் வாங்கி கொடுத்தால் நல்ல பலனைத் தரும். பிறருக்கு உதவி செய்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.

    ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்த்து ஒளி ஏற்படுத்தும் மத்தாப்புகளை குறைந்த அளவில் உபயோகித்து தீபாவளி என்ற ஒளிப்பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai