சுடச்சுட

  

  வைகையில் தண்ணீர் திறக்க நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

  By பரமக்குடி,  |   Published on : 21st October 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

  பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். ஆணையர் க.கண்ணன் வரவேற்றார்.

  கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியது:

  ஜெகநாதன் (அதிமுக): நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கருவேல் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கே.ஏ.எம்.குணா (மதிமுக): பரமக்குடி நகர் பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படுகிறது. ஆனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் பிற தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி கடையடைப்பு நடத்த தீர்மானம் செய்திருந்த நிலையில் அரசியல் சூழ்நிலையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்ற கூட்டம் வாயிலாக வலியுறுத்த வேண்டும்.

  நகர்மன்றத் தலைவர்: இதுகுறித்து மீண்டும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுப்போம்.

  முருகேசன் (அதிமுக): பரமக்குடி நகர் பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட பல ஊருணிகள் இருந்தன. அவை முற்றிலும் அகற்றப்பட்டதால் நிலத்தடி நீர் குறைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  எமனேசுவரம் பகுதியில் சுகாதாரத்துறையின் கீழ் 24 மணிநேரமும் செயல்பட்டு வந்த நகர் நலமையம் அடிக்கடி மூடப்படுகிறது.

  நகர்மன்ற தலைவர்: அது நமது பொறுப்பிலிருந்து சுகாதாரத் துறையின் வசம் சென்று விட்டது. இதுகுறித்து அத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

  ரஹிமாபீவி (அதிமுக): 29-வது வார்டு குத்துக்கல் தெரு உழவர் சந்தைப் பகுதியில் சுகாதாரமின்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பலமுறை நகர்மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

  கே.அப்துல்மாலிக் (அதிமுக): நகராட்சி பகுதியில் குடிநீர் திருடுவதாக பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார்கள் எத்தனை? அந்த மின் மோட்டார்களை அபராதத்துடன் உரியவர்களிடம் ஒப்படைத்திருக்கலாம். அல்லது ஏலம் விட்டு உரிய தொகையை வசூலித்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.

  பொறியாளர் தங்கப்பாண்டியன்: அடுத்த நகர்மன்ற கூட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மின்மோட்டார்கள் குறித்து விளக்கமளிக்கப்படும்.

  இதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், 28 பெண்கள் உள்பட 98 துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகளும், தலா ரூ.5 ஆயிரம் முன்பணமும் வழங்கினார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.முனியசாமி, மணிவாசகம், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai