சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பெய்ய துவங்கியுள்ள நிலையில் நெல் பயிருடன் சேர்ந்து களைப்பயிர்களும் முளைக்க வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ச.கண்ணையா கூறியது:

   ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட உள்ளது. இந்த நெல் பயிர்களுடன் சேர்ந்து வளரும் களைகளை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற விவசாயிகள் களைக்கொல்லிகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.

   களை முளைப்பதற்கு முன்பு களைக்கொல்லி பயன்படுத்தும் முறை: பயிர் முளைத்த 5 நாள்களுக்குள் பூட்டாகுளோர் ஏக்கருக்கு 1 லிட்டர் அல்லது பிரிடிளாகுளோர் ஏக்கருக்கு அரை லிட்டர் களைக்கொல்லிகளை, விதை முளைக்க போதுமான மழை பெய்த உடனேயே ஏக்கருக்கு 25 கிலோ உலர்ந்த மணலுடன் கலந்து, வயலில் மண் மறையுமாறு சிறிய அளவில் நீர் நிறுத்தி தூவப்பட வேண்டும்.

   களை முளைத்த பின்னர் களைக்கொல்லிகள் இடும் முறை: களைகள் முளைப்பதற்கு முன்பே இடப்பட வேண்டிய களைக்கொல்லிகள் இடப்படாத நிலையில், களை முளைத்த 15 முதல் 25 நாள்களுக்குள் பிஸ்பைரிபேக் சோடியம் போன்ற களைக்கொல்லிகளை ஏக்கருக்கு 80 மி.லி. வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் களைகள் மீது தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம்.

   களைக்கொல்லிகள் தெளிக்கும் போது கவனிக்கவேண்டியவை: களைக்கொல்லிகள் கைத்தெளிப்பான்களை பயன்படுத்தி தெளிக்க வேண்டும். இதனை பயன்படுத்தும் போது தெளிப்பவர் முன்னோக்கி நடந்து செல்லாமல் பின்னோக்கி நடந்து செல்ல வேண்டும். முன்னோக்கிச் சென்றால் தெளிப்பானை கையால்பவரின் காலடி படும் இடங்களில் களை முளைத்து வளர வாய்ப்புள்ளது.

  களைக்கொல்லிகளை தெளிப்பதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தெளிப்பு நாசில்களை பயன்படுத்த வேண்டும்.

   திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் களைக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக நடவு செய்த 10-ம் நாளில் ஆரம்பித்து 10 நாள்கள் இடைவெளியில் உருளும் களைக்கருவியினை பயன்படுத்தி களைகளை அழிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai