சுடச்சுட

  

  50 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்கம்

  By ராமேசுவரம்,  |   Published on : 28th October 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசு 50 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ்கோடி பகுதியில் புதிய சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து திங்கள்கிழமை முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

  இந்தியா- இலங்கை இடையே கடல் வழி போக்குவரத்து நடைபெற்று வந்த போது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திய பகுதி தனுஷ்கோடியாகும். இந்த பகுதி உலக புகழ் பெற்ற சிவஸ்தலம் அமைந்த ராமேசுவரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பகுதி கடந்த 1964 ஆம் ஆண்டு வீசிய பெரும் புயலால் பாதிக்கப்பட்டு பேரழிவுக்குள்ளானது. இதில் தனுஷ்கோடி நகரமே முற்றிலும் கடலில் மூழ்கியது. புயல் தாக்கி பேரழிவு ஏற்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்று வரை அப்பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

  இந்த நிலையில் தனுஷ்கோடியில் புயலில் சிக்கி சேதமடைந்து காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க அரசு அலுவலகங்களையும், கோயில் மற்றும் ரயில் சென்ற தண்டவாளப் பாதைகளையும் ராமேசுவரம் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் பார்வையிட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில் புயல் பேரழிவுக்குப் பின்னர் 50 ஆண்டுகளில் அப்பகுதியில் படிப்படியாக மீனவர்கள் குடிசை அமைத்து மீன் பிடித் தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

  ராமேசுவரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள முகுந்தராயர் சத்திரம் வரை சாலை வசதி உள்ளது. அதன் பின்னர் அப்பகுதியிலிருந்து 7 கி.மீ.தொலைவிலுள்ள தனுஷ்கோடிக்கு சாலை வசதி இல்லாமல் கடலோர கரைப்பகுதி வழியாக மீன் வண்டி, ஜீப் ஆகிய வாகனங்களில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர்.

  மேலும், அப்பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்களும் மற்றும் பள்ளிக்கு செல்லும் மீனவ குழந்தைகளும் ராமேசுவரம் வந்து செல்வதற்கு மீன் வண்டிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுநல அமைப்புகளான நுகர்வோர் அமைப்பு, விபத்து மீட்பு சங்க நிர்வாகிகள் ஆகியோர் தனுஷ்கோடி பகுதியில் சாலைகள் அமைக்க பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு இதை கொண்டு சென்று சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வந்தார். அதன் பின்னர் தனுஷ்கோடி பகுதியில் சாலைகள் அமைக்க மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதி வழங்கி சாலைப் பணிக்காக ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அப்பகுதியில் 12 அடி அகலத்தில் 3 அடி உயரத்தில் பாலத்தைப் போன்ற அமைப்பில் சாலை அமைக்க திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து முதல்கட்டப் பணியாக முகுந்தராயர்சத்திரம் பகுதியில் பள்ளம் மற்றும் மேடான மணல் பகுதியை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சமப்படுத்தும் பணி திங்கள்கிழமை முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai