சுடச்சுட

  

  ராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் கோயிலிலும், அருள்மிகு குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலிலும் கந்தசஷ்டித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

  ராமநாதபுரம் அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயில் கந்தசஷ்டிப் பெருவிழா இம்மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் காப்புக்கட்டு உற்சவத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினசரி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. தினசரி இரவு ஆலயக் கலையரங்கில் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக வியாழக்கிழமை கோயில் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெற்றது. கோயில் அர்ச்சகர் வையாபுரி முருகனிடமிருந்து வேலை எடுத்து வந்து வன்னிகாசூரனை வதம் செய்தார். பின்னர் மூலவர் அருள்மிகு வழிவிடு முருகனுக்கும் உற்சவர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் கணேசன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். வியாழக்கிழமை காலையில் அருள்மிகு முருகனுக்கும் ஸ்ரீதெய்வயானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்: ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட குண்டுக்கரை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா இம்மாதம் 24 ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினசரி மூலவரும், உற்சவரும் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தனர். கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை அருள்மிகு முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தார். பின்னர் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு வந்து வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அசுரன் சேவலாகவும், மயிலாகவும் மாறுவதை நினைவு படுத்தும் வகையில் இரு பறவைகளும் பறக்க விடப்பட்டு பின்னர் அருள்மிகு முருகன் அருகில் நிற்க வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பின்னர் அருள்மிகு சுவாமிநாத சுவாமி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai