சுடச்சுட

  

  தேவரின் 107ஆவது ஜயந்தி விழா மற்றும் 52ஆவது குருபூஜை விழா, (புதன்கிழமை) 2ஆம் நாளாக தொடர்ந்து நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் பசும்பொன்னுக்கு வந்த வண்ணம் உள்ளனர். தேவர் நினைவிடத்தில் தேங்காய் உடைத்து, பூஜை நடத்திச் செல்கின்றனர்.

  தேவர் 3 நாள் ஜயந்தி விழாவை செவ்வாய்க்கிழமை காலையில், தேவர் நினைவிட வளாகத்தில் யாகசாலை வேள்வி பூஜையை கோவை- காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நடத்தி துவக்கி வைத்தார். வேள்வி பூஜையின்போது முகூர்த்தக் கால் நடப்பட்டது.

  சாதி, மத நல்லிணக்கம், உலக அமைதி, மக்கள் நலன் ஆகியவை வேண்டி துவங்கப்பட்ட யாகசாலை வேள்வி பூஜை புதன்கிழமை மாலை வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது. புதன்கிழமை காலை முதல் ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து பசும்பொன்னுக்கு வரத் தொடங்கினர்.

  அவர்கள் தேவர் நினைவிடத்தில் தேங்காய் உடைத்து பூஜை வழிபாடு நடத்தினர். அதேபோல், புதன்கிழமை காலை முதல் தமிழகம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில், பசும்பொன்னுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

  பல கிராமங்களில் இருந்து பால் குடங்கள், பவனியாக கொண்டு வந்து, நினைவிடத்துக்கு அருகே மற்றோர் இடத்தில் உள்ள தேவரின் முழு உருவ வெண்கல சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். பல ஊர்களில் இருந்து பவனியாக முளைப்பாரி கொண்டு வந்தனர். தேவர் நினைவிட வெளி வளாகத்தில் பெண்கள் பலரும் பொங்கலிட்டனர். முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் ஏராளமானோர் காலை முதல் மொட்டை போட்டுக் கொண்டனர். 2ஆவது நாள், அரசியல் விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் இருந்து பல்வேறு தேவரின அமைப்பு தலைவர்கள், பல்வேறு பிரிவு பார்வர்டு பிளாக் கட்சியினர், தமிழ்நாடு மூவேந்தர் முன்னைற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்கள் தங்களது தொண்டர்களுடன் நினைவிடத்துக்கு வந்து வணங்கிச் சென்றனர். இரவில் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் ஏற்பாட்டில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தேவர் நினைவிடத்தில் 33 அபிஷேகங்களுடன் தேவரின் 52ஆவது குருபூஜையை கோவை- காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் நடத்துகிறார்.

  பசும்பொன் தேவர் 3 நாள்கள் திருவிழா ஏற்பாடுகளை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நினைவிட நிர்வாக உதவியாளர்கள் செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai