Enable Javscript for better performance
குண்டும், குழியுமான கமுதி-வல்லந்தை சாலையை சீரமைக்க 20 கிராமத்தினர் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குண்டும், குழியுமான கமுதி-வல்லந்தை சாலையை சீரமைக்க 20 கிராமத்தினர் கோரிக்கை

    By கமுதி  |   Published on : 17th April 2015 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி-வல்லந்தை சாலை குண்டும், குழியுமாகி சிதைந்து காணப்படுவதால் அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என 20 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     கமுதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லந்தை கிராமம். இவ்வூருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் தார்ச் சாலை போடப்பட்டது. இந்த சாலையில் காக்குடி வழியாக வல்லந்தை வரையிலும் அரசு நகர் பேருந்து இயக்கப்படுகிறது. இது தவிர புத்துருத்திக்கும் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

     கமுதி-வல்லந்தை சாலை போடப்பட்டதால் கல்லுப்பட்டி, காக்குடி, வல்லந்தை, வலைய மணக்குளம், நகரத்தார்குறிச்சி, காக்காகுளம், புத்துருத்தி, வலையங்குளம், அபிராமம், டி.புனவாசல், ஏ.தரைக்குடி, வல்லக்குளம், வீரசோளம் உள்ளிட்ட 20 ஊர்களுக்கு போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது. வீரசோழத்தில் இருந்து கமுதிக்கு அபிராமத்தைச் சுற்றிச் செல்லாமல் வல்லந்தை சாலை வழியாகச் சென்றால் 6 கி.மீ. தூரம் குறைகிறது. வல்லந்தை சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

     இந்நிலையில் இந்த தார்ச் சாலை பராமரிப்பின்றி பல இடங்களில் குண்டும், குழியுமாகி, சிதைந்து காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. இரவு நேரங்களில் சாலையில் பயணிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள், அலுவலர்கள், அமைச்சர், எம்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் இதுவரையில் சாலை சீரமைக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

      எனவே 20 கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு கமுதி-வல்லந்தை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai