Enable Javscript for better performance
ராமநாதபுரத்தில் ரூ.3.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் ரூ.3.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர்

    By ராமநாதபுரம்  |   Published on : 27th January 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

    பின்னர் திறந்த ஜீப்பில் எஸ்.பி. மயில்வாகனனுடன் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனையடுத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஆயுதப்படைப் பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்குமார் தலைமையில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட் கிராஸ் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் அணிவகுப்பு நடைபெற்றது.

    அப்போது, அணிவகுப்பை நடத்திய படைத் தளபதிகளை எஸ்.பி. மயில்வாகனன் ஆட்சியருக்கு அறிமுகம் செய்து வைத்தார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீஸாருக்கு முதல்வர் பதக்கத்தை ஆட்சியர் அணிவித்தார். இதனையடுத்து ஜவஹர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரும், சிலம்பு ஆசிரியருமான லோக சுப்பிரமணியன், ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் எஸ். அய்யப்பன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கும் ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் அரசின் சார்பில் ரூ.3.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ். விஸ்வநாதன், மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு. சுந்தரபாண்டியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி, ஏடி.எஸ்.பி. வெள்ளைத்துரை, வருவாய் கோட்டாட்சியர்கள் ராம. பிரதீபன் (ராமநாதபுரம்), சமீரன் (பரமக்குடி), ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பழனி உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai