சுடச்சுட

    

    திருவாடானை பேருந்து நிலையக் கடைகள் ஏலம்: அதிகபட்சமாக ஒரு கடையின் வாடகை ரூ.1.06 லட்சம்

    By திருவாடானை  |   Published on : 01st July 2016 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை புதிய பேருந்து நிலையக் கடையை அதிகபட்சமாக ரூ.1.06 லட்சத்துக்கு ஏலம் எடுத்தவர்கள் தொகையை செலுத்துவதற்கு புதன்கிழமை தாமதப்படுத்தியதால், ஊராட்சி மன்றத் தலைவர் அதை வாங்க மறுத்தார். பின்னர், அத்தொகையை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் செலுத்தப்பட்டது.

       திருவாடானை ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதில் 23 கடைகள் கட்டப்பட்டன. இவற்றில், ஏற்கெனவே பழைய பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வந்த 14 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் கடை ஒதுக்கப்பட்டது.

      இந்நிலையில், மீதமுள்ள 9 கடைகள் திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புதன்கிழமை பொது ஏலம் மூலம் விடப்பட்டது. ஊராட்சித் தலைவர் காளை முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், மொத்தம் 93 பேர் கலந்துகொண்டனர். இதில், மாத வாடகை அதிகபட்சமாக ரூ. 2500 என 3 கடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏலத்தில் எடுக்கப்பட்டது.   அதன்பின்னர், மாத வாடகையாக 1 ஆம் எண் கடைக்கு ரூ. 8 ஆயிரமும், 10 ஆம் எண் கடைக்கு ரூ. 78 ஆயிரமும், 14 ஆம் எண் கடைக்கு ரூ. 25 ஆயிரமும் என ஏலம் போன நிலையில், 19 ஆம் எண் கடை மட்டும் மாத வாடகையாக ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

      மாத வாடகை வைப்புத் தொகையை விட கூடுதலாக ஏலம் எடுத்தவர்கள், அத்தொகையை புதன்கிழமை மாலை 5 மணிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, 19 ஆம் எண் கடையை ஏலம் எடுத்தவர்கள் மாலை 5.50 மணிக்கு சென்று ஊராட்சித் தலைவரிடம் தொகையை செலுத்த முயன்றனர். ஆனால் தாமதமாக வந்ததால், அத்தொகையை வாங்க அவர் மறுத்துவிட்டார். இதனால், ஊராட்சி மன்றத் தலைவர் காளைக்கும், ஏலம் எடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

      இது குறித்து, ஏலம் எடுத்தவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜிடம் முறையிட்டதை அடுத்து, அவர் அத்தொகையை பெற்றுக்கொண்டார்.

      ஊராட்சி மன்றத் தலைவர் காளை செய்தியாளர்களிடம் கூறுகையில், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏலத் தொகையை செலுத்தாததால் வாங்கவில்லை. வட்டார வளர்ச்சி அலுவலர் வாங்கியது குறித்து எனக்குத் தெரியாது என்றார்.

      இதனிடையே, கூடுதல் தொகைக்கு ஏலத்தில் சென்ற மாத வாடகையான ரூ. 1 லட்சத்து 6 ஆயிரம் மற்ற கடைகளுக்கும் பொருந்தும் என விதிமுறைகளின்படி உள்ளதால், மற்ற கடைகளை ஏலத்துக்கு எடுத்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai