Enable Javscript for better performance
பார்த்திபனூர் அருகே அரசு பேருந்துகள் மோதல்: 3 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    பார்த்திபனூர் அருகே அரசு பேருந்துகள் மோதல்: 3 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம்

    By பரமக்குடி  |   Published on : 01st July 2016 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்தின் பின்புறம் அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில், 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர்.

      பரமக்குடியிலிருந்து திருப்புவனம் நோக்கிச் சென்ற நகரப் பேருந்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இப்பேருந்து, பார்த்திபனூர் காவல் சரகத்துக்குள்பட்ட திருவரங்கி நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது, ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து நின்றுகொண்டிருந்த நகரப் பேருந்தின் பின்புறம் மோதியது.

      இதில், நகரப் பேருந்தில் பயணம் செய்த பாலிடெக்னிக் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களான செவ்வூரைச் சேர்ந்த விக்னேஷ்பாபு (21), கீழப்பெருங்கரையைச் சேர்ந்த சு. ராஜபாண்டி (22), மேலப்பெருங்கரையைச் சேர்ந்த வினோத்ராஜா (15), விஜய், சு. பிரகாஷ், தியாகராஜன், புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உஷாராணி (26), இவரது 2 வயது மகன் முகில், பாப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, பரமக்குடியைச் சேர்ந்த வசந்தா (60) மற்றும் விரைவு பேருந்தின் நடத்துநர் சோமசுந்தரம் ஆகிய 11 பேர் பலத்த காயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் ஆபத்தான நிலையிலிருந்த விக்னேஷ்பாபு, ராஜபாண்டி, உஷாராணி, முகில் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

      சம்பவ இடத்துக்கு உதவி ஆட்சியர் சு. சமீரன், வட்டாட்சியர் எஸ். செய்யதுமுகம்மது ஆகியோர் விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி செய்தனர். இது குறித்து, பார்த்திபனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai