சுடச்சுட

    

    தனுஷ்கோடியில் ரூ.3 கோடியில் திட்டப் பணிகள்:ஆட்சியர் ஆய்வு

    By ராமேசுவரம்  |   Published on : 03rd July 2016 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனுஷ்கோடியில் புயலால் அழிந்து சேதமடைந்து காணப்படும் பழமையான அரசு கட்டடங்களையும், ஆலயங்களையும் புதுப்பித்து, ஒலி-ஒளி காட்சி அமைப்பது குறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தனர்.

    ராமேசுவரம் பகுதியிலிருந்து 22 கி.மீ. தொலைவிலுள்ள தனுஷ்கோடி நகரம், 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் புயலால் கடலில் மூழ்கி அழிந்தது. இதில், அரசு அலுவலகம், ஆலயம் உள்ளிட்ட சில கட்டடங்கள் மட்டுமே சேதத்துடன் தப்பின.

    இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளாக சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட தனுஷ்கோடி பகுதியை காண, ராமேசுவரம் வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மீன் வண்டிகளிலும், வேன்களிலும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    எனவே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ராமேசுவரம் அருகிலுள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியிலிருந்து தனுஷ்கோடி வரை ஒன்பதரை கி.மீ. தொலைவுக்கு மத்திய அரசின் ரூ.50 கோடி நிதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முடியும் நிலையில் உள்ளன. தார் சாலைப் பணிகள் முழுமை அடைந்துவிட்டால், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு வந்து செல்வர்.

    எனவே, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தனுஷ்கோடியில் சேதமடைந்துள்ள பழமையான தபால் அலுவலகம், ரயில் நிலையம், ஆலயங்கள் ஆகியவற்றை ரூ. 3 கோடியில் புதுப்பிக்கவும், தனுஷ்கோடியின் வரலாறு குறித்து ஒலி-ஒளி காட்சி அமைப்பது குறித்தும், மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனுஷ்கோடி பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதையடுத்து, ராமேசுவரத்திலுள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் இது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில், மாவட்ட வன உயிரினப் பாதுகாவலர் தீபக்பெல்கி, துணை ஆட்சியர் கி.சு. சமீரன், சுற்றுலாத் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், ராமேசுவரம் நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா, ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குநர் கோபிநாத், திருக்கோயில் இளநிலைப் பொறியாளர் ராமமூர்த்தி, பசுமை ராமேசுவரம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, தனியார் கட்டடக் கலை நிபுணர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai