சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவீத வெற்றிக்கு பாடுபடுவோம்: அமைச்சர் பேச்சு

  By ராமநாதபுரம்  |   Published on : 04th July 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உள்ளாட்சித் தேர்தலில் நூறு சதவீதம் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக பாடுபடுவோம் என மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மருத்துவர் முரு. மணிகண்டன் பேசினார்.

   ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அவைத் தலைவர் செ.முருகேசன் தலைமையில் நடைபெற்ற அதிமுக புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

  நான் என்றும் பதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லை. திடீரென என்னை முதல்வர் அழைத்து தகவல் தொழில் நுட்ப அமைச்சராக இரு என்றார். அதுவரை நான் அமைச்சராவேன் என்று கனவிலும் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. ராமநாதபுரத்தில் ஏற்கெனவே 12 முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் இருப்பதால் மாவட்ட செயலாளராக இருக்கிறாயா என்று முதல்வர் கேட்டபோது தயங்கி, தயங்கித்தான் ஒத்துக் கொண்டேன்.

   சட்டப் பேரவைத் தேர்தலில் ரூ. 11 ஆயிரம் மட்டுமே செலவு செய்து 33,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகித வெற்றி பெறுவோம் என்றார்.

  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கட்சியின் மாவட்ட செயலாளரான எம்.ஏ. முனியசாமி பேசியதாவது:

  சட்டப் பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. முதுகுளத்தூர் தொகுதியில் மட்டும் தோல்வியடைந்தோம்.

  இதற்கு கட்சி நிர்வாகிகள் சிலரே காரணம். தேர்தலில் தோல்வியடைந்து சோர்வோடு இருந்த என்னை முதல்வர் மாவட்ட செயலாளராக்கியுள்ளார். உண்மையாக உழைத்தால் மட்டுமே உயரமுடியும் என்பதற்கு நானே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உள்ளாட்சித் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவிகித வெற்றிக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் என்றார்.

   பரமக்குடி எம்.எல்.ஏ.எஸ்.முத்தையா பேசும்போது, திமுக இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

  இதற்கு காரணம் அதிமுகவில் உள்ள சிலர் தான். உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையாக இருந்து 100 சதவிகிதம் வெற்றி பெற வேண்டும் என்றார்.

   கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.முத்தையா, மாநில மகளிர் அணி இணைச் செயலர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.சுந்தரபாண்டியன், நகர்மன்ற துணைத் தலைவர் கவிதா சசிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், காளிமுத்தன், முருகன், வ.து.ந.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நகர் செயலர் எஸ்.அங்குச்சாமி வரவேற்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai