Enable Javscript for better performance
பீர்க்கன் குறிச்சி ஊராட்சித் தலைவர் பதவி: உயர்நீதிமன்ற உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பீர்க்கன் குறிச்சி ஊராட்சித் தலைவர் பதவி: உயர்நீதிமன்ற உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கை

    By ராமநாதபுரம்  |   Published on : 05th July 2016 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்துக்கு உள்பட்ட பீர்க்கன்குறிச்சி ஊராட்சித் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி திங்கள்கிழமை மீண்டும் எண்ணப்பட்டன.

    2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பார்த்திபனூர் அருகேயுள்ள பீர்க்கன்குறிச்சி கிராமத்தின் மொத்த வாக்குகள் 999. இதில் பதிவான வாக்குகள் 926. செல்லுபடியான வாக்குகள் 907. செல்லாத வாக்குகள் 19 என ஏற்கெனவே நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காளிதாஸ் 594 வாக்குகளும், செல்லம் 309 வாக்குகளும் பெற்றிருந்தனர். செல்லத்தை விட காளிதாஸ் கூடுதலாக 295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

    வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடுமாறு செல்லம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவை தாக்கல் செய்யுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் உத்தரவின் பேரில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழக்குரைஞர் அற்புதராஜ் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு, காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai