Enable Javscript for better performance
இறால் மீன்கள் விலை சரிவு- Dinamani

சுடச்சுட

    

    இறால் மீன்கள் வாங்குவதை ஜப்பான் குறைத்ததால், ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் இறால் மீன்களை விலை குறைவாகவே கொள்முதல் செய்தனர். இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் பிடிக்கப்படும் இறால் மீன்களில் 75 சதவீதம் ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால் இந்த மீன்களுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும்.

    இந்நிலையில் ஜப்பானில் பண்ணை மூலம் இறால் வளர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தமிழகம் உள்பட இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் இறால் மீன்களை ஜப்பான் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் ராமேசுவரத்தில் வியாபாரிகள் இறால் மீன்களை விலை குறைவாகவே கொள்முதல் செய்தனர்.

        ராமேசுவரம் பகுதியிலிருந்து 482 படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட படகுகளுக்கு தலா 100 கிலோ முதல் 120 கிலோ வரை இறால் மீன்கள் கிடைத்தன.

       பொதுவாக 1 கிலோ இறால் ரூ.300 முதல் ரூ. 600 வரை விலை கொடுத்து வியாபாரிகள் வாங்குவார்கள். ஆனால், ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச விலையே ரூ. 450க்குத் தான் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் மீனவர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai