சுடச்சுட

  

  கல்லீரல் அறுவைச் சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் தகவல்

  By ராமநாதபுரம்  |   Published on : 18th July 2016 07:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கல்லீரல் அறுவைச் சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மக்கள் தொகை தின கருத்தரங்கில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  டாக்டர் முரு. மணிகண்டன் தெரிவித்தார்.

     ராமநாதபுரம் மாவட்டக் குடும்பநல செயலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் எஸ். கருணாஸ், டாக்டர் எஸ். முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலப்பணிகள் துறையின் துணை இயக்குநர் டாக்டர் ஏ. சகாயஸ்டீபன்ராஜ் வரவேற்றுப் பேசினார்.

    கருத்தரங்கில், அமைச்சர் முரு. மணிகண்டன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்குப் பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:  தமிழகத்தில் மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரிசி உற்பத்தி அதிகமாகி விவசாயப் புரட்சி செய்துள்ளோம்.   குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. கல்லீரல் அறுவைச் சிகிச்சையில் தமிழகம் தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் அறுவைச் சிகிச்சைகள் அதிகமாக நடத்தப்படுகின்றன.

    மக்கள் தொகையை குறைத்தால்தான் நாடு வளரும், வேலையில்லாத் திண்டாட்டம் குறையும் என்பதற்காக உலக மக்கள் தொகை தின கருத்தரங்கை நடத்தி வருகிறோம்.   உணவு நியோகத் திட்டத்தில் குறைந்த விலையில் பல்வேறு பொருள்களை நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது என்றார்.

  இந்தியாவின் மக்கள் தொகை 132 கோடி: ராமநாதபுரம் ஆட்சியர்   ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்பதன் அவசியத்தைப் பற்றியும் மக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவே, உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

     உலக மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருந்து வருகிறது. கடந்த 2011 இல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகை 742 கோடி. இந்தியாவின் மக்கள் தொகை 132 கோடி. தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி. ராமநாதபுரம் மாவட்டத்தில் உளள மொத்த மக்கள் தொகை 15,53,445 ஆகும்.    தமிழகத்தில் பிறப்பு விகிதம் 15.6 சதவிகிதமாகவும், இறப்பு விகிதம் 7.3 சதவிகிதமாகவும், சிசு மரண விகிதம்21 சதவிகிதமாகவும், மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதம் 67 ஆகவும் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு பிறப்பு விகிதம் 17 சதவிகிதமாகவும், இறப்பு விகிதம் 6 சதவிகிதமாகவும், சிசு மரண சதவிகிதம் 21.2 ஆகவும் உள்ளது. ஒவ்வொரு பிறப்பும் 3.7 விநாடிகளில் இந்தியாவிலும், 39.1 விநாடிகளில் தமிழகத்திலும் நடைபெறுகின்றன. அதேபோல், ஒவ்வொரு இறப்பும் 3.7 விநாடிகளில் இந்தியாவிலும், 64.9 விநாடிகளில் தமிழகத்திலும் நடைபெறுகின்றன.

    பெண்களின் ஆயுள்காலம் 71 வயதாகவும், ஆண்களுக்கு 68 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் 80.1 சதவிகிதமாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 80.7 சதவிகிதமாகவும் உள்ளது எனத் தெரிவித்தார்.

    விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு. சுந்தரபாண்டியன், மருத்துவத் துறை துணை இயக்குநர்கள் எஸ். பவானி உமாதேவி, தி. ஆனந்த சொக்கலிங்கம், அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜி. விநாயகமூர்த்தி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai