சுடச்சுட

  

  தொண்டி அருகே 9ஆம் நூற்றாண்டு சமணப் பள்ளி கற்சிலைகள் கண்டெடுப்பு

  By திருவாடானை  |   Published on : 18th July 2016 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே இடையமடம் என்னும் இடத்தில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் பள்ளி கோயில்களும், அதிலுள்ள கற்சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், திருப்புல்லாணி உள்ளிட்ட பல இடங்களில் சமண தீர்த்தங்காரர்கள் சிற்பம் கிடைத்துள்ளன.   மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ள கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவர் அங்கு கற்படுக்கை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவிக்கிறது. இதன்மூலம், சமண மதத்தை பின்பற்றுவோர் சங்க காலம் முதல் இம்மாவட்டம் முழுவதும் இருந்துள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

    இந்நிலையில், தொண்டி அருகே சுந்தரபாண்டியன்பட்டினம் பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் சேதமடைந்து இடிந்த நிலையில் இரு கோயில்கள் உள்ளன. இவற்றை  இடையமடம் என்றும், ராமர் பாதம் என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு, ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் சார்பில், தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு, வன்னிவயல் ஆசிரியர் பரமசிவம், கொடிப்பங்கு ஆசிரியர் முத்துராமன், வட்டானம் ஆசிரியர்கள் மிக்கேல்ராஜ், ராபர்ட் புரோமியர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அங்கு, சமணர்களின் 23 ஆம் தீர்த்தங்காரர் பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம், மானஸ்தம்பம், பாத வழிபாடு, கல்லாலான சித்த சக்கரம் ஆகியன இருந்ததால், அது ஒரு சமணப் பள்ளி என்பது தெரியவந்துள்ளது.    மூலஸ்தானம், முன்மண்டபம், மானஸ்தம்பம் என்ற விதத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. மூலஸ்தானம் செவ்வக வடிவில் உள்ளது. இந்து கோயில்களில் இருக்கும் கொடிமரம் போன்ற அமைப்புள்ள மானஸ்தம்பம் 5 அடி உயரத்தில் ஒரே கல்லால் சதுர வடிவிலானது. இதன் கீழ் பகுதியில் தீர்த்தங்காரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

    முன்மண்டபத்தின் வலதுபுறம் உள்ள சுவரில் 27 செ.மீ. உயரமும் 17 செ.மீ.  அகலமும் உடைய நின்ற கோலத்திலான பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் உள்ளது. அவர் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்த நிலையில் உள்ளது. இதேபோன்ற சிற்பம், மதுரை கீழக்குயில்குடி பேச்சிப்பள்ளம் பகுதியில் உள்ள பார்சுவநாதர் சிற்பத்தை ஒத்துள்ளது. எனவே, இப்பள்ளி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.    இதன் கருவறையில் அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்காரர் கல் சிற்பம் இருந்ததாகவும், 4 ஆண்டுகளுக்கு முன்புதான் அது காணாமல் போனதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இங்கு கல்லாலான சித்த சக்கரம் வெளிப்புறச் சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரமின்றி தட்டையாக உள்ளது. இது பாண்டியர் காலக் கட்டடக் கலை அமைப்பில் உள்ளது. முன்மண்டபத்திலுள்ள மீன் சின்னங்களைக் கொண்டு, இப்பள்ளி சமணர்களின் பதினெட்டாம் தீர்த்தங்காரரான அரநாதருக்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தக்கது.

    கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை இடையமடம் சமணப் பள்ளியாக வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும். அதன்பின்னர் சமணர்களால் கைவிடப்பட்டதால், சேதுபதிகள் காலத்தில் புனரமைக்கப்பட்டு, மடமாகப் பயன்படுத்தி இருக்கலாம். கிழவன் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் எல்லை குறிப்பிடும்போது இடையமடம்  குறிப்பிடப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    சமணர்களால் அமைக்கப்பட்ட குகைப் பள்ளிகள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்பட்டாலும், கட்டுமானப் பள்ளியாக சிவகங்கை மாவட்டம் அனுமந்தக்குடியில் மட்டுமே உள்ளது. அந்த வகையில், தென்மாவட்டங்களில் கட்டுமானப் பள்ளி கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதை சீரமைத்து பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai