சுடச்சுட

    

    வெளிக்காட்டப்படாத வருமானத்தை செப். 30-க்குள் தெரிவிக்க வேண்டும்: வருமானவரித் துறை துணை ஆணையர்

    By ராமநாதபுரம்  |   Published on : 21st July 2016 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமானத்தை தானாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தின் கீழ், இதுவரை வெளிக்காட்டப்படாத வருமானத்தை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, வருமானவரித் துறை துணை ஆணையர் ஆர். மலர்க்கொடி எச்சரித்துள்ளார்.

       ராமநாதபுரத்தில் வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், துணை ஆணையர் ஆர். மலர்க்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:

      முந்தைய ஆண்டுகளில் வெளிக்காட்டப்படாத வருமானத்தைப் பற்றி தாமாகவே முன்வந்து தெரிவிப்பதற்கு, அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பு தரும் திட்டமே வருமானத்தை தெரிவிக்கும் திட்டம்-2016 ஆகும்.

     இத்திட்டத்தின்படி,ஜூன் 1 ஆம் தேதியன்று நியாயமான சந்தை மதிப்பு வெளிக்காட்டப்படாத வருவாயாகக் கருதப்படும். இதில், வருமானத்தில் 45 சதவிகிதம் செலுத்தும் வகையில் வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் இருக்கும். ஜூன் முதல் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வெளிக்காட்டப்படாத வருமானத்தை தெரிவிக்க வேண்டும்.        இதில் தெரிவிக்கப்படும் சொத்துகளுக்கு, சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். தகவல் தெரிவிக்கும் சொத்துகளுக்கு எந்த விசாரணையும் கிடையாது.

      சட்ட நடவடிக்கைகளிலிருந்து விதிவிலக்கும் அளிக்கப்படும். இணையத்தின் மூலமாகவோ அல்லது வருமானவரித் துறை அலுவலகங்களிலோ நேரில் தாக்கல் செய்யலாம்.  வெளிக்காட்டப்படாத வருமானத்தை தெரிவிக்கும்போது, அது கருப்புப் பணமாகவோ அல்லது ஊழலில் வந்ததாகவோ இருக்கக் கூடாது. இவை தவிர, வேறு எந்த வருமானத்தையும் தெரிவிக்கலாம்.

      வருமானத்தை தெரிவிக்காமல் இருந்து, அதை வருமானவரித் துறையினர் கண்டுபிடிக்க நேர்ந்தால், அந்த வருமானத்தை விட 3 மடங்கு கூடுதலாக அபராதமாக வசூலிக்கப்படும். அதேநேரம், தகவல் தெரிவிக்கும் எந்த வருமானத்தையும், சுங்கத் துறை, விற்பனை வரித் துறை உள்ளிட்ட எந்த துறையினருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றார்.

      கருத்தரங்குக்கு, வருமானவரித் துறை மற்றொரு துணை ஆணையர் ஏ. சொர்ணம் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் வருமானவரித் துறை அதிகாரி பாண்டி வரவேற்றார். வருமான வரித் துறை அதிகாரி காளிதாஸ் நன்றி கூறினார்.

      இதில், வர்த்தக சங்கத் தலைவர் பா. ஜெகதீசன், செயலர் குப்தா கோவிந்தராஜன், துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி, நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலர் பார்த்தீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai