சுடச்சுட

    

    உணவுப் பொருள் விற்பவர்கள் உரிமம் பெற ஆகஸ்ட் 4 கடைசி: ஆட்சியர்

    By ராமநாதபுரம்  |   Published on : 22nd July 2016 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உணவுப் பொருள் விற்கும் வியாபாரிகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

       ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:

       உணவுப் பொருள்கள் தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பது அவசியம். எனவே, பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருளை வாங்கும்போது பாக்கெட்டுகள் அல்லது பாட்டில்களில் உணவுப் பொருளின் பெயர், மூலப்பொருள் விவரங்கள், தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முகவரி, எடை, காலாவதி தேதி உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வாங்கவேண்டும்.

      சைவ உணவுப் பொருள் என்றால் சதுரத்தினுள் பச்சை நிற வட்டக் குறியீடும், அசைவம் என்றால் சதுரத்தினுள் அரக்கு நிற வட்டக் குறியீடும் இடம் பெற்றிருக்க வேண்டும். குடிநீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், கேன்களில் ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ளதா என கவனித்து வாங்கவேண்டும். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.

      பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் மாணவர்களை கவரும் வகையில் தரமற்ற சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும். உணவுப் பொருள் வாங்கும் எவரும் அதை சோதித்துப் பார்த்து வாங்க உரிமை உள்ளது.

      திறந்தநிலையில் ஈ மொய்த்த உணவுப் பலகாரங்கள் அல்லது வெட்டி வைத்துள்ள பழங்களை வாங்கி உண்ணக் கூடாது. கார உணவுகளில் நிறம் சேர்த்து விற்பனை செய்யப்படும் காலிபிளவர் பக்கோடா, சிக்கன் 65 மற்றும் பொறித்த மீன் உணவுகளை வாங்கி உண்ணக்கூடாது.   உரிமம் இல்லாமல் உணவுப் பொருள் தயாரிப்பது, விற்பனை செய்வது, இருப்பு வைத்திருப்பது, விநியோகிப்பது ஆகியன சட்டப்படி குற்றம். ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் அனைத்து உணவுப் பொருள் வியாபாரிகளும் அதற்கான உரிமத்தை அவசியம் பெற்றாக வேண்டும் என்றார் ஆட்சியர்.  கருத்தரங்கில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் ஜெகதீஸ் சந்திரபோஸ், கல்லூரி முதல்வர் பி. மாரிமுத்து, கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  முன்னதாக, உணவுப் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வுக் கண்காட்சியையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai