சுடச்சுட

  

  பரமக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு: முறைகேடாக இணைப்பு வழங்குவதாக புகார்

  By பரமக்குடி  |   Published on : 22nd July 2016 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடி நகராட்சியில் முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதால், நகரின் பெரும்பாலான இடங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

     பரமக்குடி 36 வார்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெரிய நகராட்சியாகும். இங்குள்ள மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 30 லட்சம் லிட்டரும், கள்ளிக்கோட்டை, காட்டுப்பரமக்குடி ஆகிய குடிநீர் திட்டங்கள் மூலம் 30 லட்சம் லிட்டர் குடிநீரும் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

     இதற்காக, நகரில் 20 இடங்களில் நீரேற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு, அந்தந்த வார்டுகளுக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நகராட்சியில் 9,300 இணைப்புகள் கொடுக்கப்பட்டு, அதற்கான வரிவசூல் செய்யப்பட்டு குடிநீர் முறையாக வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நகராட்சியில் முறையாக பதிவு செய்யாமலும், அந்தந்தப் பகுதியில் உள்ள நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டியின் கொள்ளளவை கணக்கில் கொள்ளாமலும், ஆங்காங்கே நகராட்சி குடிநீர் குழாய்களிலிருந்து அனுமதி பெறாமல் முறைகேடாக இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் ஒவ்வொரு இணைப்புக்கும் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 44 ஆயிரம் வரை கட்டணமாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும் எனக் கூறி வசூல் செய்வதாகத் தெரிகிறது.

    இதுபோன்ற புதிய இணைப்புகள் வழங்கப்படுவதாலும், பெரும்பாலான வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் திருடப்படுவதாலும், சீராகக் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாள்களாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் விநியோகிக்கப்பட்ட குடிநீர் தற்போது 3, 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, இதைக் கண்காணித்து பதிவுமூப்பு உள்ளவர்களுக்கு மட்டும் முறையாக புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதுடன், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப குடிநீரை தட்டுப்பாடின்றி முறையாக வழங்கிட, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai