Enable Javscript for better performance
பாம்பன் எக்ஸ்பிரஸ்: கலாமின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றுமா?- Dinamani

சுடச்சுட

  

  பாம்பன் எக்ஸ்பிரஸ்: கலாமின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றுமா?

  By ராமநாதபுரம்  |   Published on : 25th July 2016 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் இயக்க வேண்டும் என்ற குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே. அப்துல்கலாமின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றுமா என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    பாம்பன் கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் 2.3 கி.மீ.நீளத்தில் ரயில் பாலம் உள்ளது. 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில்பாலம் இந்த ஆண்டுடன் 102 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்பாலத்தின் நூற்றாண்டு விழா கடந்த 28.1.2014 ஆம் தேதி பாம்பன் ரயில் நிலையம் அருகிலேயே நடந்தது. இவ்விழாவுக்கு தலைமை வகித்தும், நூற்றாண்டு விழா கல்வெட்டினைத் திறந்து வைத்தும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசுகையில், இப்பாலத்தின் வழியாகத்தான் நான் சிறுவனாக இருந்த போது பல லட்சம் முறை பயணம் செய்து தினமணி நாளிதழை வீடு,வீடாக சென்று போட்டிருக்கிறேன். ஆர்ப்பரிக்கும் கடல்,மேலே வானம் இவை இரண்டுக்கும் இடையில் ரயிலானது பாலத்தில் செல்லும் போது அற்புதமான தென்றல் காற்று வீசும்,ஒருவித தெய்வீக சங்கீத ஓசை கேட்கும். அந்த சங்கீதம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது . பொறியியல் தொழில் நுட்ப பெருமைக்குரிய இப்பாலம் என்வாழ்வின் ஒரு அங்கம். இவ்விழாவினை எப்போதும் நினைவு கூரத்தக்க வகையில் ரயில்வே நிர்வாகத்துக்கு ஒரு அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு புதிதாக பகல் நேரத்தில் செல்லும் விரைவு ரயில் ஒன்றை இயக்க வேண்டும்.அந்த ரயிலில் மீனவ மக்கள் பயனடையும் வகையில் மீன்களைப் பதப்படுத்தும் வசதியுடன் கூடிய ஒரு ரயில் பெட்டியும் இணைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

     இவ்விழா நடந்து முடிந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இக்கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றவே இல்லை. இந்நிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமும் கடந்த 27.7.2015 ஆம் நாளன்று உயிரிழந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்துக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இம்மாதம் 27 ஆம் தேதியுடன் அவர் மறைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. அவரது நினைவிடத்தின் முன்பாக கலாமின் முழுஉருவ வெண்கலச்சிலையை மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் திறக்கப்பட அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய,மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சிப்பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்நாளிலாவது கலாமின் கோரிக்கையான ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் பகல்நேர விரைவு ரயில் இயக்கப்படுவதற்கான என்ற அறிவிப்பு வெளியிடப்படலாம் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

   இது குறித்து மாவட்ட ஜவுளி ரெடிமேட் சங்கத் தலைவர் வைகிங்.எம்.எஸ்.கருணாநிதி கூறியதாவது:

    ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த ரயில்சேவை நிறுத்தப்பட்டு வாரம் ஒரு முறையாக இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயிலுக்கான ராமேசுவரம் திருச்சி இணைப்பு ரயில் சேவையும், ராமேசுவரத்திலிருந்து பாலக்காடுக்கு செல்லும் ரயில் சேவையையும் ரயில்வே நிர்வாகம் நிறுத்திவிட்டது. பாம்பன் பால நூற்றாண்டு விழாவில்  அப்துல்கலாம் முன்வைத்த  கோரிக்கையையாவது ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றினால் வர்த்தகர்களுக்கும்,பொதுமக்களுக்கும் முக்கியமாக மீனவர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai