சுடச்சுட

  

  கல்வியால் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு கலாம்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு புகழாரம்

  By ராமநாதபுரம்  |   Published on : 28th July 2016 05:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாதாரண மனிதனும் கல்வியால் மிக உயர்ந்த இடத்துக்கு முன்னேற முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

  குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராமேசுவரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் கட்டப்படவுள்ள தேசிய நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா, சிலை திறப்பு விழா, அருங்காட்சியகம் திறப்பு விழா ஆகியன புதன்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமை வகித்தார். மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர்.சுபாஷ்ராம்ராவ் பாம்ரே, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர்.முரு.மணிகண்டன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

  அப்துல் கலாம் எண்ணங்களாலும், செயல்களாலும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்து, பல சவாலான பணிகளைச் செய்து, குடியரசுத் தலைவர் பதவி வரை ஒரு சாதாரண மனிதரால் கல்வியால் உயர முடியும் என்பதற்கு கலாம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அணுசக்தி விஞ்ஞானத்தை உலகம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். கலாமோடு ராமேசுவரம் ஒன்றியுள்ள ஊர் என்பதால் "அம்ருத்' திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ரூ. 48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலாம் நினைவிடத்துக்காக கூடுதலாக இடத்தை ஒதுக்கி தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  மனோகர் பாரிக்கர்: கலாமின் 7 அடி உயர வெண்கலச் சிலையை திறந்துவைத்தும், தேசிய நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியதாவது:

  அறிவியலிலும், அணு விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கிய விஞ்ஞானியாக திகழ்ந்தவர் கலாம். கலாமின் நினைவிடத்தின் வடிவம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

  விழாவில் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழின் மீதும் குறளின் மீதும் கலாம் வைத்திருந்த பற்று அளவிட முடியாதது என்றார்.

  இந்த விழாவில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா, கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், குடும்பத்தினர், உறவினர்கள், ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் இயக்குநர் சி.டி.பாலாஜி, கேரளத்தைச் சேர்ந்த சுவாமி சுனில்தாஸ், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் டாக்டர்.எஸ்.கிறிஸ்டோபர் தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai