Enable Javscript for better performance
விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாவு: சடலத்தை வாங்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாவு: சடலத்தை வாங்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 30th July 2016 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளப்பச்சேரியில் வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் சடலத்தை வாங்க மறுத்து, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அரசு மருத்துவமனை பிணவறை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

       திருப்புல்லாணி அருகே பள்ளப்பச்சேரி கிராமத்தில் அரசுப் பேருந்தும், ஆம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த மேலும் 3 பேரும் உயிரிழந்தனர்.  

       இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சரவணக்குமாரின் சடலம், ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து, ராமநாதபுரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை பிணவறை முன்பாக அமர்ந்து சடலத்தை வாங்க மறுத்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர் சங்க  செயலர் பாலமுருகன் கூறுகையில், தமிழகம் முழுவதும் இதுவரை ஆம்புலன்ஸ் வாகன விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் யாருக்கும் இன்னும் அறிவிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை தரப்படவில்லை. தற்போது, விபத்தில் உயிரிழந்துள்ள சரவணக்குமாருக்கும் தொகையை தராமல் ஏமாற்றி விடலாம்.

       எனவே, விபத்தில் உயிரிழந்த சரவணக்குமார் உள்ளிட்ட 4 பேருக்கும் நஷ்டஈடாக தலா ரூ. 25 லட்சம் தரவேண்டும். தமிழகம் முழுவதும் உயிரிழந்துள்ள 12 ஊழியர்களுக்கும் தருவதாக அறிவித்த தொகையை உடனே வழங்கவேண்டும். இவ்விரு கோரிக்கைகளும் நிறைவேறும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்றார்.

       தகவலறிந்து அங்கு வந்த ராமநாதபுரம் வட்டாட்சியர் எம். மாரி, துணை வட்டாட்சியர் எஸ். பழனிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ஆனந்த் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

       இதையடுத்து, இறந்தவர்களுக்கு நஷ்டஈட்டுத் தொகை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன்பேரில், போராட்டத்தை கைவிட்டு, சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai